News Just In

3/13/2021 08:35:00 AM

நாட்டில் பாரிய மருந்துத் தட்டுப்பாடு- அறுவை சிகிச்சைகளுக்கும் பாரிய சிக்கல்!!



நாட்டில் தற்போது பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , அறுவை சிசிக்கைளை முன்னெடுப்பதில் கூட சிக்கல் காணப்படுகிறது.

புற்று நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இலட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டு மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போது பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோயாளர்களுக்கு பணம் கொடுத்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது ஆட்சி காலத்தில் மருந்துகளுக்கான விலை குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு இலட்சம் ரூபா வரை மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாம் தீவிர நோயாளிகளுக்கு இலவசமாக மருந்தினை வழங்கினோம். தற்போது அந்த சலுகையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமான வறுமையிலுள்ள மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தனியார் மருந்தகங்கள் உள்ளிட்டவை தத்தமது விருப்பத்திற்கு மருந்துகளின் விலையை அதிகரிப்பதற்காகவா எமது அரசாங்கத்தில் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டுக்கான சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டது ? மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படாத இந்நிலையில் வைத்தியசாலை கட்டட நிர்மாண பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம் , சீனி இறக்குமதி வரிச் சலுகை மூலம் 15 பில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய மோசடியாகும் என்றார்.

No comments: