News Just In

2/01/2021 01:18:00 PM

இன அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனுக்கும் அழைப்பு- தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் - க.மோகன்!!


அரசியலையும், கட்சியையும் ஓரமாக வைத்துக் கொண்டு தமிழன் என்ற உணர்வுடன் மட்டக்களப்பில் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள இன அடக்கு முறைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிள்ளையான் மற்றும் வியாளேந்திரனுக்கும் அழைப்பு விடுவதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 04ம் திகதி மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள அடக்குமுறைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள பேரினவாதத்தின் அதி உச்சத்தில் இருக்கும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியில் தொடர் அடக்குமுறைகளும், அபகரிப்புகளும் நடந்த வண்ணமே உள்ளன. அடிமைக்கும். அடக்குமுறைக்கும் எதிராக திறக்காத வாயும், உயராத கையும் சமூகத்தில் வாழ தகுதியற்றது. இதன் அடிப்படையில் எமது இனத்திற்கு எதிராக வளர்ந்து வரும் அடக்கு முறைக்கும், அபகரிப்புக்கும் எதிராக ஜனநாயக முறையில் போராட வேண்டிய தார்மிக கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உரியது.

இந்த நிலையில் பிள்ளையான் அவர்களும், வியாளேந்திரன் அவர்களும் ராஜபக்ஷாக்களின் அரசுக்கு உடந்தையாக இருந்தாலும் தமிழன் என்ற உள்ளுணர்வில் அடக்குமுறை என்ற ஊசி உங்களை நாள்தோறும் குத்திக் கொண்டிருக்கும் என்று நாம் அறிவோம், ஆரம்பத்தில் எல்லோரும் உரிமை என்ற கோல் எடுத்தே அஞ்சல் ஓட்டப் பந்தயத்தில் ஓடப் புறப்பட்டவர்கள்.

எனவே, அரசியலையும், கட்சியையும் ஓரமாக வைத்துக் கொண்டு தமிழன் என்ற உணர்வுடன் எமது மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள உரிமைப் போராட்டத்தில் தமிழரே, தமிழராய் இணைய வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்

No comments: