News Just In

2/20/2021 07:21:00 PM

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஆணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதி!!


எப்.முபாரக்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஆணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மயிலவெவ - பெல்லிக்கட பகுதியைச் சேர்ந்த ஜயதிலகே கெலும் சஞ்ஜீவ (40 வயது) என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

தனது அக்காவின் மகளுடன் நபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என கத்திக்குத்துக்கு இலக்கான நபர் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் வயல் காவலுக்காகச் சென்று கொண்டிருந்த போது அக்கா மகளுடன் பேசிய நபரும் அவருடைய தந்தையும் அவரைத் தொடர்ந்து சென்று கத்தியால் குத்தியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: