News Just In

1/22/2021 08:33:00 AM

இலங்கை கடற்படையினரின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய மீனவப் படகில் பயணித்த நால்வரின் சடலங்கள் மீட்பு!!


இலங்கை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரின் கப்பலுடன் மோதி கடந்த செய்வாய்க்கிழமை இந்திய மீனவப் படகு விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர்களின் நால்வரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளது.

வடக்கு கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகில் 4 பேர் இருந்ததாக இந்திய அதிகாரிகள் தங்களுக்கு அறிவித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு சடலங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வியாழக்கிழமை மற்றும் இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோட்டைப் பட்டிணத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீன் பிடிப்பதற்காக புறப்பட்ட படகே நெடுந்தீவிற்கு வடமேற்கே விபத்திற்குள்ளானதாக தெரியவருகின்றது.

கடல் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் படகை மோதித் தள்விட்டு தப்பிச்செல்ல முனைந்த போது மீனவப் படகு கவிழ்ந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏ.மெசியா(வயது-30) வட்டவாளத்தை சேர்ந்த வி.நாகராஜ் (வயது- 52) மண்டபத்தை சேர்ந்த என். சாம் (வயது-28) மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார் (வயது-32) ஆகியோரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சாம் என்பவர் இலங்கையில் இருந்து 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




No comments: