இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரைக் கண்காணிக்க வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், திங்கட்கிழமை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும், செவ்வாய்க்கிழமை பொலிஸ் உத்தியோகத்தரும், புதன்கிழமை விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரும் கண்காணிக்க வேண்டும்.
வியாழக்கிழமை கிராம உத்தியோகத்தரும், வெள்ளிக்கிழமை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் கண்காணிக்க வேண்டும்.
சனிக்கிழமை குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தரும் ஞாயிற்றுக்கிழமை பொது சுகாதார பரிசோதகரும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குடும்பமொன்று தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களில் உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு நாட்கள் மாத்திரமே கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குடும்பமொன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பொது சுகாதார பரிசோதகரினால் கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த நாளில் கடமையில் ஈடுபடுபவருக்கு அறிவிக்க வேண்டியதும் அவரது கடமையாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தல் காலத்தில் கடமையில் ஈடுபடுபவர்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டியது கிராம உத்தியோகத்தரின் பொறுப்பாகும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவோரை முறையாகக் கண்காணிப்பது நாட்டின் தேவைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி செயலகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: