News Just In

6/01/2020 03:25:00 PM

ஏறாவூரில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சிக் கடைகள் பூட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
ஏறாவூர் நகர பிரதேசத்திலும் ஏறாவூர் நகரை அண்டியுள்ள ஏறாவூர்ப் பற்று பிரதேசத்திலுள்ள மாட்டிறைசி, ஆட்டிறைச்சிக் கடைகளும் கடந்த வெள்ளிக்கிழமை 29.05.2020  தொடக்கம் பூட்டப்பட்ட நிலையிலுள்ளன.

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள 14 இறைச்சிக் கடைகளும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைப் பிரிவின் கீழ் வரும் 9 மாட்டிறைச்சிக் கடைகளுமாக 2 ஆட்டிறைச்சிக் கடைகளுமாக மொத்தம் 25 கடைகள் இவ்விதம் பூட்டப்பட்ட நிலையிலுள்ளன.

மாட்டிறைச்சி ஆட்டிறைச்சிக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் இறைச்சிப் பிரியர்கள் கவலையடைந்துள்ள அதேவேளை கோழி இறைச்சிக்கும் மீனுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையினால் மாமிசக் கழிவுகள் அகற்றப்படாமலிருப்பதே தாங்கள் மாடுகளையோ ஆடுகளையோ அறுக்காமலிப்பதற்குக் காரணம் என்று மாட்டிறைச்சி ஆட்டிறைச்சிக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஏற்கெனவே ஏறாவூர் நகர சபை திண்மக்கழிவகற்றலில் பல சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இறைச்சிக் கடைக்காரர்கள் நகர சபையின் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நகரசபை நிருவாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவில்லை என்றும் அவர்கள் மாட்டுத் தோல்களையும் எலும்புகளையும் உரிய முறைப்படி கழிவகற்றலில் சேர்ப்பிப்பதில்லை என்றும் நகர சபை நிருவாகத்தினர் இறைச்சிக் கடைக்காரர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் சம்பந்தமாக திங்கட்கிழமை 01.06.2020 ஏறாவூர் நகரசபைச் செயலாளரை இறைச்சிக் கடைக்காரர்கள் சந்தித்து இறைச்சிக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இதன்போது ஏறாவூர் நகரசபை திண்மக் கழிவகற்றலில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து நகர சபைச் செயலாளர் முஹம்மத்; றபீக் ஷியாவுல்ஹக் தெளிவுபடுத்தினார்.

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் மாட்டுத்தோல் உட்பட நாளாந்தம் சுமார் 6 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் கிலோகிராம வரையிலான இறைச்சிக் கழிவுகள் சேர்வதாகவும் இவற்றை இறைச்சிக் கடைக் கடைக்காரர்கள் தரம்பிரித்துத் தருவதில்லை என்றும் இதனால் மாட்டுத் தோல்களை அப்புறப்படுத்துவதில் நகர சபை பெருஞ் சிரமத்தை எதிர்கொள்கிறது. அத்துடன் இதுவிடயமாக மக்கள் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. வழக்குகளையும் சந்தித்து வருகின்றோம்.

எனவே, இந்த விடயத்தில் இறைச்சிக் கடைக்காரர்கள் ஒத்துழைப்பு வழங்கினாலேயொழிய வேறு மாற்றுத் தீர்வுகள் இல்லை.' என்றார்.

இந்த விடயத்தின் பாரதூரத் தன்மை குறித்துத் தெளிவடைந்து கொண்ட இறைச்சிக் கடைக்காரர்கள் தாங்கள் இனிமேல் முறையான திண்மக் கழிவகற்றலுக்காக நகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நகர சபையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மாட்டுத் தோல்களை சேதப்படுத்தாமல் தரம்பிரித்து நகரசபை திண்மக் கழிவகற்லுக்கு சேர்ப்பிப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதனயைடுத்து நகர சபைத் தலைவருடனும் நகர சபை உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து தீர்வைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.





No comments: