மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட கௌரவ தியாகராஜா சரவணபவன் அவர்கள் தாம் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலம் முதல் இன்றுவரை மாநகர எல்லைக்குள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் சிறந்த நிர்வாகத்தையும் மக்களுக்கு வழங்கிவருவது பாராட்டுதலுக்குரியது.
ஊழலற்ற நிர்வாகத்தை செவ்வனே நடாத்திச் செல்வது ஏனைய மாநகர சபைகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. மாநகர சபையின் ஏழாவது முதல்வர் மூன்றாவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் இக்காலகட்டத்தில் பல்வேறு தரப்பினரதும் பாராட்டைப் பெற்றிருப்பது ஒரு சிறப்பாகும்.
மாநகர சபையின் நிதிக்கு அப்பால் மத்திய அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் 450 மில்லியன் ரூபா நிதி உதவியைப் பெற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இக்காலப்பகுதியில் 189 வீதிகள் புனரமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் சூரிய மின் உற்பத்தி வழங்கல், உட்கட்டுமான பணிகள், அனர்த்தகால நிவாரண வேலைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன.
Online மூலம் மாநகர சபைக்குரிய கட்டணம் செலுத்தும் வசதி, வீடு கட்டுவதற்கான விண்ணப்பம் பரிசீலிக்கும் முறை என்பன அமுல்படுத்தப்படுவது சிறப்பு வசதியாகும். 'டிஜிட்டல்' முறை மூலம் குறைகேள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் அறிந்து பரிகாரம் வழங்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1800 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்காக தற்போது சாத்தியக்கூற்று அறிக்கைகள் தயார்செய்யப்படுகின்றன.
கௌரவ தியாகராஜா சரவணபவன் அவர்களின் கல்வி அறிவு, நிர்வாகத் திறன், மொழியாற்றல் திறன், மதிநுட்பம் என்பன பல்வேறு தரப்பினரையும் அணுகி பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகேயுள்ள புகையிரத நிலைய வீதி விஸ்தரிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இவ்வீதி விஸ்தரிப்பு மூலம் நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் நகருக்குள் நுழையாமல் வாகனங்கள் கல்முனை வீதிக்கு செல்ல வழியேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையில் இருந்த எந்த முதல்வரும் மாநகரசபை செயற்பாட்டிற்கு செலவிட்ட நேரத்தைவிட அதிகளவு நேரத்தை இவர் செலவிடுவது மக்கள் மீதான கரிசனையை படம் போட்டுக்காட்டுகிறது. இதன் காரணமாக மாநகர சபைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க மாநகர முதல்வரிடம் மக்கள் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அனர்த்த காலமான சீயோன் தேவாலய வெடிகுண்டு வெடிப்பாகலாம், தீ விபத்தாகலாம், கொரோனா தொற்றாகலாம் இவ்வாறான எந்த அனர்த்த நிகழ்வின்போதும் குறித்த இடத்திற்கு முதலில் பிரசன்னமாகும் பிரமுகராக முதல்வர் காணப்படுகிறார். நேரம் பாராமல் குறித்த இடத்திற்கு சமூகமளிப்பதன் மூலம் மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார்.
வெள்ள காலங்களில் வடிகால்கள் அடைபட்டு வீதிகளில் நீர் தேங்கி மக்கள் வீடுகளுக்குள் ஆண்டுதோறும் நீர் புகுகின்றது. சமூக சிந்தனையற்ற சில நபர்களின் செயற்பாட்டால் மக்கள் மாரி காலத்தில் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சனையை ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுசென்று இராணுவத்தினரின் உதவியுடன் வடிகான்களை புனரமைக்க எடுக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
கடந்த பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான துறைநீலாவணைப் பகுதியில் குப்பைகள் மற்றும் வெட்டப்பட்ட மிருக கழிவுகளை அண்டைய மாவட்ட மக்கள் வீசி வருகின்றனர். இது துறைநீலாவணைப் பகுதி மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தது.
அண்மையில் துறைநீலாவணைப் பகுதிக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து எதிர்காலத்திலும் இப்பிரச்சினை நிகழ்வதைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி அவரின் பிரச்சினை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தனை சிறப்புக்களையும் திறமைகளையும் கொண்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் இன்று அகவை 51இற்குள் காலடி எடுத்து வைக்கின்றார். அவரை வாழ்த்துவதுடன் பன்னெடுங்காலம் மக்களுக்கான நற்பணிகளை மேற்கொள்ள வாழ்த்துகிறோம்.
- கல்லடி அமுதன் -







No comments: