News Just In

5/17/2020 10:07:00 AM

நாளை அதிகாலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...!


நாடளாவிய ரீதியாக நேற்றிரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிவரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 18 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், கடந்த 11 ஆம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக இதுவரை 55 ஆயிரத்து 863 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 15 ஆயிரத்து 298 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடு பூராகவும் உள்ள மதுவரி அனுமதிபத்திரம் கொண்ட சகல மதுபான சாலைகளும் இன்றைய தினம் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மீண்டும் நாளைய தினம் மதுபானசாலைகளை திறக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: