News Just In

4/21/2020 08:35:00 AM

இலங்கையை மீளாத் துயரில் ஆழ்த்திய உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள்-இன்று ஒரு வருடம் நிறைவு

உலகத்திற்கு அன்பை போதித்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்த புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதக் கும்பலொன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்திய காட்டுமிராண்டித்தனமாக தற்கொலைத் தாக்குதல் பெருந்துயரத்தின் ஒரு வருட நிறைவு இன்றாகும்.

அந்த வகையில், இன்றைய நாளானது மனித நேயம் கொண்ட அனைத்து மக்களுக்கும் துயரத்தை நினைவுபடுத்தும் நாளாகும்.
மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம், கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பேரி, ஷங்கிரிலா, சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவமானது இலங்கை வரலாற்றில் மாறாத துயரமாகிவிட்டது.
குறித்த 06 இடங்களிலும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி காலை 08.45 மணி தொடக்கம் 09.30 மணி வரையிலான 45 நிமிட நேரத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 500இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
குறிப்பாக, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நடத்த தயாரான வேளையில், குழந்தைகள் குழுமியிருந்த பகுதியில், குண்டுதாரியினால்  குண்டு வெடிக்கவைக்கப்பட்டதில்  குழந்தைகள் உட்பட 31பேர் உயிரிழந்ததுடன் 112 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் 197 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று காலை 8.40 இற்கு அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறும், 8.45 இற்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்றைய நாளில் உறவுகளை இழந்த மக்களின் வேதனையில் நாமும் பங்கு கொள்வோம்.
(VTN செய்திக் குழுமம்)

No comments: