News Just In

3/29/2020 04:01:00 PM

காத்தான்குடியில் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வர்த்தக நிலையங்கள் திறக்க, பொதுமக்கள் வெளியில் வரத்தடை


ஊரடங்குச் சட்டம் நாளை (30) தளர்த்தப்பட்டாலும் காத்தான்குடியில் நாளை திங்கட்கிழமை யாரும் வர்த்தக நிலையங்களை திறக்க கூடாது, பொது மக்களும் வெளியில் வரக்கூடாது என காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தெரிவித்துள்ளார். இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்திலிருந்து வர்த்தகர் காத்தான்குடிக்குள் பிரவேசித்திருக்கின்றார்கள். இது உண்மையிலே எங்களுக்கு அறிய முடியாமலிருந்த விடயம், நேற்றையதினம் நாங்கள் 70க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். இவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்திலும் கூட வேறு குறுக்குப் பாதையூடாக காத்தான்குடிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். எனவே நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலை இருந்தும் நாங்கள் எமது பிரதேச செயலகப்பகுதிக்குட்பட்ட கடைகள், பொதுச்சந்தைகள் அனைத்தையும் மூடுவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

வங்கி மற்றும் மருந்தகங்கள் மாத்திரமே திறந்திருக்கும். இவை தவிர வீடுவீடாக அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக 150 க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் காத்தான்குடி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் 70க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட வர்த்தகர்கள் நடமாடும் பொழுது பாரதூரமான நிலையை ஏற்படுத்தக்கூடிய சாதகமான காரணங்கள் இருப்பதனால் மக்களை நாங்கள் விழிப்பாகவும் வீடுகளில் தங்கியிருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உலர் உணவுகளை நடமாடும் விற்பனை நிலையங்க@டாக விநியோகிப்பதற்கும் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து காத்தான்குடிக்கு வருபவர்கள் முற்றாகத் தவிர்ப்பது நல்லது. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்றபோது தவிர்க்கமுடியாத காரணங்களால் வருபவர்கள் கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்வதைத் தொடர்ந்து 14 நாட்கள் அவர்களைவீட்டுக்காவலில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று அவர் தெரிவித்தார்.

இத் தீர்மானக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது. இதில் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காத்தான்குடி பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ உத்தியோகஸ்தர்கள், மற்றும் நகரசபை செயலாளர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: