(க.விஜயரெத்தினம்)
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 13ஆவது ஆண்டு நிறைவையொட்டி இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட T20 கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (07) விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி மனோஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்....
நான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியில் போட்டியிடுகின்றேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தலைமைகள் தங்களால் முடிந்த வரை தமிழ் தேசியத்தின் இலக்கினை நோக்கி ஒன்றுபட்டு பயணித்து கொண்டிருக்கின்றோம்.
அன்று துறைநீலாவணைக் கிராமத்தில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட கிராமம்.எல்லைப்புறத்தை பாதுகாத்தும், தமிழர்களின் இருப்பை பாதுகாத்தவர்கள் துறைநீலாவணை வீரத்தமிழர்கள்தான்.வீரபுருசர்கள் வாழ்ந்த மண்ணிலே தமிழ்தேசியத்தை பலப்படுத்துங்கள்.
இதனை சர்வதேசம் எங்கும் தெரியும். தமிழ்மக்களின் எண்ணங்களை நிறைவேற்றித்தராத பட்சத்தில் நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த 70 வருடத்திற்கு முன்னர் சி.மூ.இராசமாணிக்கம் ஐயா மற்றும் ஏனைய தலைமைகள் தமிழ் தேசிய இலட்சியத்தினை அடைவதற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள்.
அதற்கு பின்னர் வந்த தமிழ் தேசிய பற்றார்களிடம் சரியான முறையில் கையளித்ததன் பிரகாரமே துறைநீலாவணை போன்ற பிரதேசங்களில் இன்றும் தமிழ் தேசிய பற்றுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய கால சந்ததியினரும் தமிழ் தேசிய இலட்சிய பாதையில் பயணித்து எம்மால் முடியுமான வரை தமிழ் தேசியத்திற்கு பணியாற்றி விட்டு எம்மால் அடையமுடியாமல் போன இலக்கினை வரும்கால சந்ததியினருக்கு கையளிப்பதனூடாக எமது இலட்சியத்தினை அடையக்கூடியதாக இருக்கும்.
இதனை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சியினர் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மக்களிடையே திணிப்பதன் ஊடாக தக்க வைக்கலாம் என நினைக்கின்றார்கள். அவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது மக்கள் அடிபணியப் போவதுமில்லை.சோரம் போகப் போவதுமில்லை.
அவ்வாறு செல்வோமாயின் மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு போன்று நாமும் ஏமாற்றமடைய வேண்டியவர்களாகி விடுவோம்.இந்த நாட்டில் தமிழர்களாகிய நாம் இரண்டாம் தர பிரஜைகள் அல்லர்.நாமும் இந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ வேண்டியவர்கள்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் பிரதேசங்களில் வாக்களிப்பினை அதிகரித்து நான்கு ஆசனங்களை பெறவேண்டும். அதற்காக ஒவ்வொரு இளைஞர்களும், பொதுமக்களும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர்களின் பலத்தை சர்வதேசத்துக்கு புடம்போட்டு காட்டுவதற்கு எத்தனியுங்கள். அப்போதுதான் இந்த அரசிடமிருந்து நாம் உரிமை,சம அந்தஸ்து போன்றவற்றை வெகுவாகப் பெறலாம் எனத் தெரிவித்தார்.
3/09/2020 08:30:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
அபிவிருத்திகளால் தமிழ் தேசிய இலக்கினை திசை திருப்ப முயற்சி-தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்: சாணக்கியன்
அபிவிருத்திகளால் தமிழ் தேசிய இலக்கினை திசை திருப்ப முயற்சி-தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்: சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)


No comments: