News Just In

2/11/2020 08:18:00 AM

நல்ல அரசியல் தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை-கிழக்கு முன்னாள் முதல்வர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ எவராயிருந்தாலும் பாகுபாடு காட்டாத நல்ல அரசியல் தலைவனே நாட்டுக்குத் தேவை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புக்கள் எங்கும், எதிலும் பாகுபாட்டாலும் ஓரங்கட்டுப்படுதலாலும் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால, சமகால அரசியல் போக்கு குறித்து அவர் திங்கட்கிழமை 10.02.2020 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்களின் மனப்பாங்குகளும் அதன் மூலமாக அவர்களது செயற்பாடுகளுமே நாட்டை பாகுபாட்டின் மூலம் சீரழித்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்களை புறந்தள்ளிவிட்டு எதிர்கால இளம் அரசியல் தலைவர்கள் இனவாதம், மதவாதம், மொழி பேதம் கடந்து நாட்டை ஒருமைப்பாட்டின் தளமாக கட்டியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பு மிக்க சில தலைவர்கள் இலங்கையர்களாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு இன மத மொழி பேதம் கடந்து சேவையாற்றியிருக்கின்றபோதும் சில இனவாதத் தலைவர்களாலேயே நாடு இன்றளவும் சிதைவடைந்து போயுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

சிறுபான்மை பெரும்பான்மை என்று பேதம் காட்டாது அனைத்து சமூகத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டு அபிவிருத்தயை நோக்கி நாட்டைக் கட்டியெழுப்பும் தேசபக்த முயற்சியை எதிர்கால இளம் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் இளைய தலைமுறையினருக்கான தனது அறைகூவலில் வலியுறுத்தியுள்ளார்.

இன, மத, மொழி வாதங்களை வளர்த்து அதன் மூலமாக நாட்டுக்கு அழிவையும், இழிவையும் ஏற்படுத்தக் கூடிய அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்,

இனியும் இந்த நாட்டின் எந்தவொரு சமூக மக்களும் உயிர்ச் சேதங்களையும், பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை நேசிக்கும் தேச பக்தர்களாக சிங்கள தமிழ் முஸ்லிம்கள் திகழ்வதற்கு இந்த நாட்டில் இனிவரும் அரசியல் தலைமைகள் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வளம் மிக்க இலங்கைத் தேசம் நலம் மிக்கதாய் மாறுவதற்கு நல்ல அரசியல் தலைவர்களுக்காக உள்ள வெற்றிடங்கள் நேரிய சிந்தனை கொண்ட இளம் தலைமுறைகளால் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: