வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்டவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலநோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15 ஆம் திகதிவரை கோரப்பட்டு அவை பட்டியலிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நேர்முகத்தேர்வு இம்மாதம் 26 தொடக்கம் 29 வரை பிரதேச செயலகங்களில் நடை பெறவுள்ளது.
பின்னவரும் புள்ளிகளின் அடிப்படையில் பயிலுநர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
1). விண்ணப்பதாரி சமுர்த்தி பயனளியாயின் 15 புள்ளிகள்
2). சமுர்த்தி பெற தகுதி இருந்தும் சமுர்த்தி இல்லாதோர் 15 புள்ளிகள்
3). கணவன் அல்லது மனைவியை இழந்த, 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவிக்கு 15 புள்ளிகள்
4).குடும்ப அங்கத்தவர் ஊனமுற்று இருப்பின் 15 புள்ளி
5). குடும்ப அங்கத்தவர் அல்லது தங்கி வாழ்வோர் வயோதிபர் / நோய்வாய்ப்பட்டவராக இருப்பின் 2 புள்ளிகள்.
6). குடும்ப வருமானம் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவு எனின் 10 புள்ளி
7). சமூக சேவையில் ஈடுபட்டு இருப்பின் சான்றுதல், தலா ஒவ்வொன்றுக்கும் , 5புள்ளிகள்
8).விளையட்டுத்துறை மாவட்ட மட்டம்=1, மாகாண மட்டம்=2, தேசியம்=5
9).விண்ணப்பதாரி ஊனமுற்று இருப்பின் 5புள்ளி
10). விண்ணப்பதாரி சுகதேகி எனின் 5 புள்ளி
தெரிவு செய்யப்படும் பயிலுநர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றிற்கு 22 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் தொழில் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பு வழங்கப்படும்.
விவசாய உற்பத்தி உதவியாளர், பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் அடங்கலாக 25 சேவை பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
No comments: