News Just In

2/11/2020 01:59:00 PM

மட்டக்களப்பு தமிழ்ச் சங்க அலுவலகம் திறப்பு விழா


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் தமிழ் சங்க அலுவலகமும் கட்டிடத் திறப்பு விழாவும் சனிக்கிழமை 15.02.2020 இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – கொழும்பு வீதி பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க கட்டிடம் அமைந்துள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 9.00 மணியளவில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறவிருக்கின்ற இவ்விழாவில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சித மூர்த்தி தலைமையேற்கவுள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராசா சுரவணபவன் சங்கப் பொருளாளரும் கட்டிட குழுத் தலைவருமான தேசபந்து எம். செல்வராஜா ஆகியோர் இணைந்து இக்கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு பிள்ளையாரடி புரவிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு தமிழ் சங்க கட்டிட வாசலில் வரவேற்பு உபசாரங்கள் நடைபெற்றதும் கட்டிட நிர்மாண கொடையாளிகளின் நாமம் பொறித்த நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்யப்பட்டு கட்டிட வாசல் முன்றலில் நிருமாணிக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து திறப்பு விழா தொடர்ந்து நிகழும்.

மேலும் இவ் வைபவத்தை சிறப்பிக்க மட்டக்களப்பு ரிதம் கலைக் குழுவினரின் வரவேற்பு நடனமும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெறவிருப்பதோடு மலர்குழு ஆசிரியர் வெல்லவூர்க் கோபால் கட்டிட வரைஞர் எஸ். லோகேந்திரதாஸ், அதற்குப் பொறுப்பாகவிருந்த எந்திரி ரகு ஆகியோரும் கட்டிடத்தை கட்டி நிறைவு செய்த கொத்தனார் கலைஞர் குழுத் தலைவரும் கௌரவம் பெறவிருக்கின்றனர்.

No comments: