News Just In

2/25/2020 07:32:00 AM

வாழைச்சேனை பகுதியில் காணாமல்போனவர் காட்டு யானை தாக்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளத்துச்சேனைக் காட்டுப் பகுதியில் காட்டு யானையால் தாக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலமொன்று ஞாயிற்றுக்கிழமை 23.02.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பிள்ளையான் வள்ளியம்மா (வயது 83)  என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இந்த மூதாட்டி இம்மாதம் 08ஆம் திகதி பேரில்லாவெளி கிராமத்தில் இடம்பெற்ற மாதர் சங்கக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக மரங்களடர்ந்த காட்டுப் பகுதியால் சென்று கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தார் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

இவர் காட்டு யானையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் தொடர்ந்து உறவினர்களால் தேடப்பட்டு வந்தார்.

அவ்வேளையிலேயே ஞாயிற்றுக்கிழமை பள்ளத்துச்சேனைக் காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்ட அந்த சடலத்தின் அருகில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே அது காணாமல்போன மூதாட்டியினுடையது என அடையாளம் காணப்பட்டது.

சடலத்தை உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனை பொலிஸாரி; மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: