News Just In

2/10/2020 05:41:00 PM

கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

அம்பாரை மாவட்டத்தின் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் கொரோணா வைரஸின் தாக்கத்தை வருமுன் தடுப்பதும் தொற்று ஏற்பட்டால் அதை கையாள்வது என்பது சம்பந்தமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிராந்தியத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் விளக்கமளிக்கும் வகையிலான செயலமர்வொன்று வெள்ளிக்கிழமை (07) கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணியகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான வைத்தியசாலைகள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் சார்ந்த தொற்றுநோய் தொடர்பான அனைத்து வைத்திய உத்தியோகத்தர்களும் பொது சுகாதார பரிசோதகர்களும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிவ், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மாகிர் உடன் இணைந்து இச் செயலமர்வு நடத்தப்பட்டது.

கல்முனைப் பிராந்தியத்தில் சகல சுகாதாரத்துறையினரும் சகலவிதமான முன்னேற்பாடுகளுடன் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் சம்பந்தமாக தகவல்களை பிரதேச செயலகங்களின் ஊடாக தினமும் ஆவணப்படுத்தி உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் எனவும் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

அந்த வகையில், அறுகம்வே, பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் சம்பந்தமாகவும் கூடிய அவதானம் செலுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுவதும் தேவையின்றி சனக்கும்பல்களுக்குள் செல்வதை தவிர்ப்பதும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள் என்றும் அவர் தெரிவித்தார்.



No comments: