
1946 ஆம் ஆண்டு அரசினர் கல்லூரி என்ற பெயரில் அப்போதைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த நல்லையா அவர்களால் இப் பாடசாலை உருவாக்கப்பட்டது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலன்கருதி உருவாக்கப்பட்டதாயினும் நல்லையா அவர்கள் அரசியல் ரீதியாக பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாக அரசினர் கல்லூரியானது அந்த நாளில் அதிகூடிய பௌதிக வழங்களைக் கொண்ட பாடசாலையாக உருவெடுத்தது. தனித்தனி வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், பாடசாலையுடன் அமைந்த விளையாட்டு மைதானம் என்பன குறிப்பிடத்தக்கன.
தனித்தனியான இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் பலக்லைக்கழக ஆய்வுகூடத்தை ஒத்ததாக உருவாக்கப்பட்டது. இக் கல்லூரியில் ஆண்கள், பெண்கள் உயர்தரம் வரை கற்கக் கூடிய கலவன் பாடசாலையாக காணப்பட்டது. அதுமட்டுமன்றி க.பொ.த உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் கற்கக்கூடிய விரல் விட்டு என்னும் பாடசாலையில் இதுவும் ஒன்றாகும். இதன் காரணமாக பல பாகங்களில் இருந்தும் தமிழ், முஸ்லிம் மாணவ மாணவிகள் இப் பாடசாலையை நாடினார்கள்.
அக்காலகட்டத்தில் அதிகளவான மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானப் பட்டதாரிகள் உருவாக்கம் பெற இப் பாடசாலை வழிகோலியது. தற்போது பல பதவிகளில் உயர் பதவி வகிக்கும், வகித்த பலர் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களே!
மாணவர்களை பற்றி குறிப்பிடும் போது பாடசாலையை வழிநடத்திய அதிபர், ஆசிரியர்களையும் புறந்தள்ளிவிட முடியாது, அரசினர் கல்லூரி என முன்னாளில் அழைக்கப்பட்ட இந்துக்கல்லூரி இடைக்காலத்தில் கோட்டமுனை வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டது, பின் நாளில் அதிபர் ஐ.சாரங்கபாணி காலத்தில் இந்துக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டதாக அறியமுடிகிறது.
ஆண், பெண் இருபாலரையும் கொண்ட இந்துக்கல்லூரி அருகே உள்ள பாடசாலையை மையப்படுத்தி ஆண்கள் மட்டும் கல்வி பயிலும் பாடசாலையாக மாற்றப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றது. வேறு பாடசாலையின் நலனுக்காக இக் கல்லூரியின் பாரம்பரியத்தை மாற்றியதில் பல பழைய மாணவர்கள் இன்று வரை அதிருப்தி கொண்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் எமது உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய இந்தக் கல்லூரி மேலும் வளர்ச்சி பெற்று புகழ் பரப்ப இறைவனை பிரார்த்திப்போம்.
பாடசாலையின் 74 ஆவது ஆண்டை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று நடத்தப்படுகிறது.













No comments: