News Just In

1/31/2020 07:44:00 PM

ஆரையம்பதியில் இடம்பெற்ற மண்முனைப்பற்று பிரதேச பொங்கல் விழா

(கல்லடி நிருபர்)
மண்முனைப்பற்று பிரதேசத்தின் பொங்கல் விழா ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (31) ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தினியின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது பாரம்பரிய முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அதிதிகளினால் பிரதான பொங்கல் பானையினை அடுப்பில் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதேசத்தின் அரச திணைக்களங்கள், கிராமிய சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களினால் பொங்கல் பொங்குவதற்கு ஆயத்தமாகவிருந்த 48 பொங்கல் பானைகளையும், அலங்காரங்களையும் அதிதிகள் பார்வையிட்டதனைத் தொடர்ந்து பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அதன்பின்னர், பிரதான அரங்கில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, அதிதிகளின் உரை நிகழ்த்தப்பட்டதனை தொடர்ந்து சிறார்கள் மற்றும் கலைஞர்களின் அழகிய கண்கவர் கலையம்சங்கள் அரங்கேற்றப்பட்டதுடன்,

ஆரையூர் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் இலங்கேஸ்வரா இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன், பொங்கல் நிகழ்வின் போது சிறப்பான முறையில் அலங்காரம் செய்து பொங்கல் பொங்கிய மூன்று குழுவினரிற்கு பரிசுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதல் பரிசினை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: