News Just In

1/15/2020 03:00:00 PM

அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான மாபெரும் தொழில் சந்தை

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலக தொழில் நிலையமும் இணைந்து நடத்தும் 2020ம் ஆண்டுக்கான மாபெரும் தொழில் சந்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் வழிகாட்டலில் நடைபெறவுள்ள இவ் தொழில் சந்தையில் 1500க்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் பங்குபற்றி பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (13) மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இத் தொழில் சந்தையில், தொழில் வழிகாட்டல்கள், தொழில் திறவுகோல் வேலைத்திட்டம், திறன் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள், அரச தொழில் பயிற்சி நிறுவனங்களின் சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், உளவள ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நடைபெறவுள்ளன.

இதில், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களது சுய விபரக் கோவைகளுடன் வருகை தருவதன் மூலம் தங்களுக்கு விருப்பமான வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரன் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு அம்பாறை மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரனைத் (0771578330) தொடர்பு கொள்ள முடியும்.

No comments: