மட்டக்களப்பில் 243 தனியார் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன, தற்போதைய வெள்ளம் காரணமாக 200 க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையங்களை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் அரைவாசி கல்வி நிலையங்கள்தான் மூடப்பட்டன. மிகுதி இயங்கி வருகின்றன.
இவ்வாறு பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனில் அக்கறையில்லாத சட்டத்தை மதிக்காத ஆசிரியர்களிடம் இருந்து படித்துவரும் பிள்ளை எவ்வாறு நல்லதொரு பிள்ளையாக உருவாக முடியும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் கூறினார்.
அண்மையில் மட்டக்களப்பில் நடந்த விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களின் திறமை வெளிக்காட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர்.
கல்வியினை எடுத்துக்கொண்டால் 2010 இல் 8 ரூபாயாக இருந்த வகுப்புக் கட்டணம் 2019 இல் 80 ரூபாயாக மாறியுள்ளது. கல்வி முக்கியம்தான். அதைவிட பிள்ளைகளின் ஒழுக்கம் மிக முக்கியம், அது பெற்றார்கள் கைகளில்தான் தங்கியுள்ளது.
திறமை சாலிகள் எங்கிருந்தாலும் சாதிப்பார்கள் அதற்கு பாடசாலையில் இருந்து படிப்பு வரவில்லையென்று விலக்கி விடப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, அவருக்கு அவரது தாய் ஊக்கப்படுத்தியதன் காரணாமாக ஒரு மாபெரும் விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.
இலங்கையில் உள்ள விஞ்ஞானிகளில் மட்டக்களப்பில் ஒருவர் இருக்கிறார் நம்மில் எத்தனை பேருக்கு அவரைத் தெரியும் 52 கண்டுபிடிப்புக்களுக்கு சொந்தக்காரர் அவர். இவ்வாறு பெற்றார்கள் தங்களது பிள்ளைகளை ஒரு கண்டுபிடிப்பாளனாக, ஒரு விஞ்ஞானியாக உருவாக்க வேண்டும்.
மட்டக்களப்பில் சுமார் 200 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளனர், அத்துடன் தற்போதைய வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டு உள்ளது இதனை கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிலையத்தாருடன் முன்பு கலந்துரையாடியதற்கு இணங்க கிறிஸ்மஸ், புதுவருடம் போன்ற பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு மார்கழி 20 ஆம் திகதி தொடக்கம் தை மாதம் 05 ஆம் திகதி வரை விடுமுறை விடுவதற்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சீரற்ற காலநிலையால் உடனடியாக கல்வி நிலையங்களை மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மார்கழி 20 ஆம் திகதி தொடக்கம் தை மாதம் 05 ஆம் திகதி வரை பிள்ளைகளுக்கான கட்டாய விடுமுறையாகும், இக்காலத்தில் எந்த ஒரு வகுப்புக்களும் நடத்தப்படக் கூடாது.
மட்டக்களப்பில் 243 தனியார் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன, இதில் உத்தரவினை மதித்து அரைவாசி நிலையங்கள் மூடப்பட்டன மற்றயவை மூடப்படவில்லை. அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நாங்களாகவே மூடிய சந்தர்ப்பம் காணப்பட்டது.
இவ்வாறு பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனில் அக்கறையில்லாத சட்டத்தை மதிக்காத ஆசிரியர்களிடம் இருந்து படித்துவரும் பிள்ளை எவ்வாறு நல்லதொரு பிள்ளையாக உருவாக முடியும்,
ஆசிரியர் ஒருவர் கூறி இருக்கிறார் வகுப்பினை மூடச் சொல்லி வருகின்றவர் கட்டாயம் என்னிடம் படித்தவராகத்தான் இருக்க முடியும், வரட்டும் பார்த்துக்கலாம் என்று அவர் கூறியிருக்கின்றமை நகைப்புக்குரியது. இவர்களை போன்று பணம் மட்டும்தான் முக்கியம் என்று செயற்படுபவர்களால் எவ்வாறு ஒரு நல்ல சமூகத்தினை உருவாக்க முடியும்.
மட்டக்களப்பு மாநகர சபையானது பிள்ளை நேய மாநகரசபையாக உருவாக்கப்பட்டுள்ளது, பிள்ளைகளின் கருத்துக்களை அறிய பாடசாலைகளில் ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பிள்ளைகள் மாநகரை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.
அதே போன்று விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் மாநகரை அவர்களுக்கு ஏற்றாபோல் வளங்களை உண்டு பண்ண இந்த பாடசாலை நிருவாகத்தினரும் கருத்து தெரிவிக்கலாம், கடிதம் வாயிலாகவோ, அல்லது முதல்வரிடம் முறையிடலாம் எனும் இணையம் அல்லது நேரடியாகவோ தெரிவிக்கலாம், நான் மாநகரை மென்மேலும் அபிவிருத்தி செய்ய விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: