News Just In

10/28/2019 09:57:00 PM

மட்டக்களப்பு தமிழரின் தொன்மை கூறும் தாந்தாமலை !

ஆக்கம்-லோகிதராஜா தீபாகரன்
படங்கள்-சிவா, இணையம்
இலங்கை திருநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கிலங்கையில் மீனனிங்கள் கவிபாடும் மட்டக்களப்பில் வந்தோரை வாவென்று அழைக்கும் மக்கள் வாழ்கின்ற தேசம் படுவான்கரையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட (பட்டிப்பளை) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 10மைல் கல் தொலைவில் காடும் காடுசார்ந்த பிரதேசமும் மலையும் மலைசார்ந்த பிரதேசமும் வயலும் வயல் சார்ந்த பிரதேச நிலமும் சூழ அமையப்பெற்றுள்ள இடமே தாந்தாமலை.

தாந்தாமலையில் ஸ்ரீ முருகன் ஆலயமானது வரலாற்று சிறப்புமிக்கது, தொன்மை வாய்ந்தது, ஆடகசவுந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் “தாண்டவகிரி” என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் எனவும் அழைக்கப்படுகின்றது.
தாந்தாமலை முருகன் கோவில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் தென் மேற்கு எல்லையில் முருக வழிபாட்டுக்கு முக்கியமிக்க மலையும் காடும் சூழ்ந்த அமைவுப் பகுதியில் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க மலைக்கோவில் ஆகும். இங்கு பல முனிவர்கள் சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இன்றும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகின்றது.

தாந்தாமலை என பெயர்க்காரணம்
தாந்தாமலை கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள தான்தோன்றீச்சரம் கோவில் வைப்புத் திரவியம் உள்ள இடமாதலால் இது பொக்கிசமலை என்றும் அழைக்கப்படுகிறது. தான்தோறீச்சரர் தாண்டவமாடிய இடமாதலால் இதற்குத் தாண்டவமலை என்ற சொல் பின்னர் சிதைவடைந்து தாந்தாமலை என வழங்கப்பெற்றது என சில வரலாறுகள் கூறுகின்றன
இவ்வாலயத்தின் வரலாறு கூத்திகன் – சேனன், உலகநாச்சி, ஆடகசௌந்தரி குளக்கோட்டன் ஆகியோருடன் தொடர்புபட்டு நிற்பதை வரலாற்றுச் சான்றுகளும் கர்ணபரம்பரை கதைகளும் சான்று பகிர்கின்றது. ஆதிதிராவிடர்களின் மரவழிபாட்டுடன் தொடர்புடையதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் வழிபாடும் திறந்த வெளிக்கோயிலாக தாந்தாமலையும் இருந்ததாக கர்ண பரம்பரைகதைகளுடாக அறியமுடிகின்றது.
தாந்தாமலையின் உச்சியில் சிலந்தி மரம் ஒன்றும் அதனடியில் பிள்ளையார் ஒன்றும் இருந்தன என்பதை அறியக்கூடியதாகவுள்ளதோடு கதிர்காம யாத்திரியர்களின் வழிபாட்டு தலமாக தாந்தாமலை இருந்துள்ளது.

ஆடகசௌந்தரி ஆட்சி காலத்தில் தாந்தாமலை ஆலயத்தை தரிசித்ததாகவும் மாளிகை அமைத்து தங்கியும் இருந்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றது இதற்குச் சான்றாக இன்றும் இரசதானி அமைந்திருந்த தடயங்களும் கற்றூண்களும் மற்றும் சிற்பவேலைப்பாடுகள் சிதைந்து அழிந்த கற்களும் காணக்கிடக்கின்றன.

இப்பிரதேசம் மலையும் மலைசார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமுமாக உள்ளதால் அதிகளவான மக்கள் மழையை நம்பி விவசாயம் செய்கின்றனர் அதனடிப்படையில் மழை இல்லாத காலத்தில் மலைப்பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து பூசை செய்தால் மழை பொழியும். இதில் இன்புற்ற வரலாறுகள் உள்ளதுடன் அது இன்றும் வழக்கத்தில் உள்ளதை காணமுடிகின்றது.
1956க்கு பின் தாந்தாமலை வழிபாடு
1956ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் தமிழ் மக்களால் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கதிர்காமத்தீர்த்த யாத்திரையில் பெரும் சங்கடத்தையும் தடையுமும் ஏற்படுத்தியது இதனால் கதிர்காமக் கந்தனை தாந்தாமலையில் கண்டு வழிப்பட்டதாகவும் கூறப்படுவதாடு இன்னோர் பக்கம் தாந்தாமலை ஆலயம் கவனிப்பார் அற்று காடு சூழ்ந்து இருந்தபோது அங்கிருந்த கட்டிடங்களும் வழிபாட்டு இடங்களும் அழிந்திருந்தன அத்தோடு வழிபாடு இல்லாமல் போய் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் முனைக்காட்டினைச் சேர்ந்த கா.பாலிப்போடியார் எனும் அன்பருக்கு கனவிலே தோன்றிய முருகப் பெருமான் தாந்தாமலை எனும் இடத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தான் அமைந்திருப்பதாகவும் அந்த காட்டை வெளியாக்கி துப்பரவு செய்து ஆடித்தீர்தோற்சவத்தை செய்யுமாறும் கூறி மறைந்தாரம்.

இத்தகையதொரு நிலையில் தான் தாந்தாமலை காட்டினை முனைக்காட்டுக் கிராமத்தைச் சேர்ந்த க.மாமங்கபிள்ளை கு.வ.சின்னத்தம்பி, கா.பாலிப்போடி வைத்தியர் தா.பிள்ளையாப்போடி, பெ.பொன்னம்பலம், சீ.பூபாலபிள்ளை முதலைக்குடாவைச் சேர்ந்த வ.வி.வெ.கனகசபைப்போடி ஆகிய அன்பர்கள் காட்டினை வெட்டி வெளியாக்கினார்கள் அதனைத் தொடர்ந்து மகிழடித்தீவைச் சேர்ந்த அன்பர்களான வே.உ.குமாரசிங்கம், கதிரவேலாப்போடி, ந.கனகசபை ஆகியோரும் அப்பணியில் இணைந்திருக்கின்றனர். அதன் பின் தொடர்ச்சியாக திருவிழாக்கள் இன்று வரை நடைப்பெற்றுக் கொண்டிருக்கினன்றது. தாந்தாமலையை சாந்தமலை தாண்டவகிரி பொக்கிச மலை என்றும் அழைப்பர்.

அண்மையில் மட்டக்களப்பு மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர்களது வேள்நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ். பல்கலைக்கழகம்) -இவ்வாறான பெயர்கள் அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

நாகர் காலத்து பொருட்களான அம்மி குழவி ஓட்டுச்சிதைவுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதுடன் இங்கு அம்மியும் குழவியும் சேர்ந்ததாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பிற்காலத்தில் இருந்த வன்னிமைகளை போல 2000ம் ஆண்டுகளுக்கு முதல் நாகரின் சிற்றரசு இருந்தது. அல்லது அவர்களது சிற்றரசு ஒன்றில் கொக்கட்டிச்சோலை அடங்கி இருந்தது என்றும் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் முன் மண்டபத்தின் வாயிலில் உள்ள கற்களை ஆராய்ந்ததில் அவை தாந்தாமலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவற்றிலும் நாகமன்னர்களது பெயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தை சுற்றி பல குகைகள் பல சிறியகுன்றுகள் காணப்படுகின்றன இவற்றில் பல பண்டைய எழுத்துக்கள் இன்னமும் இனம் காணப்படாமல் உள்ளது

ஆலய அமைப்பு
ஆலயம் ஆரம்ப காலத்தில் மலைக் கோயிலாகவும் பின்னர் கொத்துப்பந்தலாகவும் அமைந்திருக்கின்றது பின்னர் அக்கால ஆலயங்கள் அழிந்தன. பிற்பாடு மலையடிவாரத்தில் முருகன் ஆலயம் அமைக்கப்பட்டது. அதனை சுற்றி நாகதம்பிரான் ஆலயம் தெய்வானை அம்மன் ஆலயம் விஸ்ணு ஆலயம் வள்ளியம்மன் ஆலயம் மலை உச்சியில் பிள்ளையார் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரணையில் திருகோண நட்சத்திரத்தில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்தையும் திருவிழாக்களின் எண்ணிக்கையையும் மையமாகக் கொண்டு உற்சவம் இடம்பெறும்.

நிருவாக அமைப்பு
முதலாவது செயற்குழு 1956ம் ஆண்டு ஆடிமாதம் ஆரம்பிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மார்கழி மாதம் 9ம் திகதி நிருவாகசபை தெரிவு செய்யப்பட்டது. அதன்பின் பல தடவைகள் நிருவாக அமைக்கப்பட்டும் இடையில் தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாக சபையின் கீழும் இயங்கி வந்த நிருவாக அமைப்பானது மீண்டும் 1981ம் ஆண்டு தொடக்கம் பரவலான நிருவாக அமைப்பின் கீழ் தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆலய நிருவாகம் தொடர்ந்து மும்மூன்று வருடங்களுக்கொரு முறை தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தீர்த்தோற்சவம்
வருடந்தோறும் முருகன் கோயிலில் கொடியேறி ஆடிப்பூரணையில் திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றது.

No comments: