
நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மட்கோ மற்றும் துளசிபுரம் பகுதிகளுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (09) நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.
வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பல பகுதிகளில் வடிகான்களைத் துப்புரவு செய்து மழைநீர் சீராக வெளியேறுவதற்காக 3.156 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
தற்காலிக நடவடிக்கைகளுடன் நின்றுவிடாமல், மேம்படுத்தப்பட்ட வடிகால் கட்டமைப்பு, நிலைபேறான நகரத் திட்டமிடல் மற்றும் காலநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ஊடாக நீண்டகால வெள்ளத் தடுப்பு திட்டத்தை முன்னெடுப்பதே நோக்கம் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தில் பிரதேச செயலாளர் என். மதிவண்ணன், திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராசா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments: