அர்ச்சுனாவின் பதவிக்கு வந்த சோதனை; நீதிமன்றத்தில் இன்று புதிய திருப்பம்!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது அர்ச்சுனா அரச வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறி, ஓஷல ஹேரத் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அரச பதவியில் உள்ளவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில், அர்ச்சுனா தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என மனுதாரர் வாதிட்டுள்ளார்.
ஆனால், சம்பளமின்றி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்ததால், அர்ச்சுனாவை அரச அதிகாரியாகக் கருத முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன்னதாக வாதிட்டிருந்தனர்.
இதற்கிடையில், அர்ச்சுனா சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இனிமேல் முன்னிலையாகமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனா எம்.பியின் புதிய பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணியான கௌசல்யா நரேந்திரன், அவர் சார்பில் புதிய சட்டத்தரணிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரிப்பதற்கான நீதியரசர்கள் குழாம் உரிய முறையில் அமைக்கப்படாததால் வாதங்களைத் தொடர முடியவில்லை.
மனுதாரரான ஓஷல ஹேரத் சார்பில் சட்டத்தரணிகளான என்.கே. அசோக் பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்
இதனையடுத்து, வழக்கின் மேலதிக வாதங்களை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அர்ச்சுனா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அரச பதவியில் இருந்தாரா என்பதே இந்த வழக்கின் முக்கிய சட்டப் பிரச்சினையாக உள்ளது.
இதற்கிடையில், தாம் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கமாட்டேன் என்ற கருத்தை அர்ச்சுனா பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10/12/2026 04:22:00 PM
அர்ச்சுனாவின் பதவிக்கு வந்த சோதனை; நீதிமன்றத்தில் இன்று புதிய திருப்பம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: