
ஹார்முஸ் பதற்றம் குறைந்துள்ள நிலையில், 26 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா குறைத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் தணிந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், முக்கிய எண்ணெய் உற்பத்தி வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஈராக், குவைத் ஆகியவை தங்கள் எண்ணெய் ஏற்றுமதியை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர்.
சவுதி அரேபியா தன்னுடைய முக்கிய துறைமுக தளமான ராஸ் தனுராவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதியை 90 சதவீதம் மீண்டும் நடத்த தொடங்கியுள்ளது.
தற்போது சந்தையில் கச்சா எண்ணெய் தாராளமாக கிடைக்க தொடங்கி இருப்பதால் பிரணட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 72 டொலராக குறைந்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரித்தாலும், ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா
இந்நிலையில் ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் போட்டி நாடுகளை எதிர்கொள்ளவும் ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா குறைத்துள்ளது.
சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனம், ஆசிய வாடிக்கையாளர்களுக்கான அதிகாரப்பூர்வ விற்பனை விலையை பிராந்திய அளவுகோலை(Dubai Benchmark) விட 1.50 டொலர் குறைத்துள்ளது.
ஜூன் மாத கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பீடும் போது, ஒரே மாதத்தில் பேரல் ஒன்றின் விலை 11 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாத விலை குறைப்பு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 8 டொலர் வரையிலும் குறையும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி அராம்கோ பேரலுக்கு 11 டொலர் என்ற மிகப்பெரிய சரிவை அறிவித்துள்ளது.
இது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நிம்மதி பெருமூச்சாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: