News Just In

6/09/2026 09:05:00 AM

கோறளைப்பற்று வடக்கு பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து. .!இரா ,சாணக்கியன்

கோறளைப்பற்று வடக்கு பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து. .!
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்.இரா ,சாணக்கியன்



முதற்கட்ட உரம், விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், இதுவரை அந்த உரம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் தனியார் விற்பனையாளர்களிடமிருந்து அதிக விலைக்கு உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தற்போது இரண்டாம் கட்ட உரம் வழங்கப்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது. எனினும் அதற்கான உரங்களும் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் விவசாய உற்பத்திச் செலவுகள் அதிகரித்து, விவசாயிகள் கடுமையான பொருளாதார சுமையை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், நெல்லுக்கான நிர்ணய விலையை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டு மட்டும் தீர்மானிக்காமல், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்திச் செலவுகள், நீர்ப்பாசனப் பிரச்சினைகள், உரப் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களையும் கருத்தில் கொண்டு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர்மட்டத்தில் தேவையான பரிந்துரைகளை முன்வைக்குமாறு கௌரவ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று, தட்டுமுனை மற்றும் கட்டுமுறிவு பகுதிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அப்பகுதிகளுக்கு நிலையான மற்றும் போதுமான பொதுப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோருகின்றேன்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் 400-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தோணி உரிமையாளர்கள் முறையான பதிவு மற்றும் சான்றிதழ்கள் இன்றி இருப்பதாக அறியப்படுகிறது. எனவே அவர்களுக்கான பதிவுகளை விரைவாக மேற்கொண்டு, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குள் அவர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கதிரவெளி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதியில் மிக விரைவாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், வணிக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச காணிகளை பிரதேச சபைக்கு ஒதுக்கி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

இதனுடன், கிராமப்புற வீதிகள் புனரமைப்பு, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், விவசாய கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளை சீரமைத்தல், மீனவர் சமூகத்திற்கான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகிய விடயங்களும் அவசர கவனம் பெற வேண்டிய தேவைகளாக காணப்படுகின்றன.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மேற்கூறிய அனைத்து விடயங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது கோரிக்கைகளை முன்வைத்தேன்.

No comments: