முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும் ஒன்றிணைவுக் கலந்துரையாடலும் இன்று (13) நடைபெற்றன.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வட்டுவாகல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த காணி உரிமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்திருந்தனர்.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் நில மீட்புக்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், முல்லைத்தீவு மக்களினால் தங்களது ஆதரவும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலின்போது குருந்தூர் மலை விவகாரம், கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புகள், கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம், வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அத்துடன், இனிவரும் காலங்களில் நில மீட்புக்காக வடகிழக்கை இணைக்கும் செயலணியாக ஒருங்கிணைந்து செயற்படுவது தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
No comments: