
வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 3 மீற்றர் உயர சுனாமி அலைகள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இவாத்தே மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
80 சென்டிமீற்றர் உயரம் பதிவான மிகப்பெரிய அலைகள் உருவானப் போதிலும், நிலநடுக்க அபாயம் நிறைந்த ஜப்பானில், அடுத்த வாரத்தில் இன்னும் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, பெரிய அலைகள் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன், ரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பின்னர் எச்சரிக்கை விடுத்தது. கடந்த 2011-ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமியைத் தூண்டி 18,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதுடன், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.
அந்த நினைவுகளில் இருந்து ஜப்பானிய மக்கள் இன்னும் விடுபடவில்லை. திங்களன்று 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவான கடலுக்கடியிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதிகளான — ஜப்பானின் முதன்மைத் தீவான ஹொன்ஷூ மற்றும் வடக்கு பிராந்தியமான ஹொக்காய்டோ ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு — பெரிய சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
நிலநடுக்க அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ வரையிலும் உணரப்பட்டன. உள்ளூர் நேரப்படி 16:52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகும், ஹொக்கைடோவில் சுனாமி எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன.
ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியெங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானின் இவாத்தே மாகாணத்தின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால், அதுவரை அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த 9.0 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: