News Just In

4/03/2026 07:02:00 PM

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த மூதாட்டி மரணம் – கண்ணீர் வடித்த குரங்கு

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த மூதாட்டி மரணம் – கண்ணீர் வடித்த குரங்கு


இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் ராயரா டொட்டி பகுதியில், மனிதனுக்கும் விலங்கும் இடையே உருவான அபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் மனதை உருக்கும் சம்பவம் தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

85 வயதான பார்வதம்மா என்ற மூதாட்டி, வயது மூப்பு காரணமாக கடந்த மார்ச் 30ஆம் திகதி உயிரிழந்தார். அவருடைய இறுதி நிகழ்வின்போது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் தருணம் அங்கு இருந்தவர்களை மட்டுமல்லாது, இணையவாசிகளையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த மூதாட்டி தன்னுடைய வீட்டின் அருகே வரும் குரங்குகளுக்கு தினமும் உணவளிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தார். பலர் குரங்குகளை தொந்தரவாகக் கருதிய போதிலும், அவர் அவற்றை தனது நண்பர்களாகவே கருதி அன்புடன் பராமரித்தார். இதனால், மூதாட்டிக்கும் குரங்குகளும் இடையே ஒரு வலுவான பாசப்பிணைப்பு உருவாகியுள்ளது.

பார்வதம்மா இறந்த நிலையில், அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, குரங்குகளில் ஒன்று அங்கு வந்தது. உணவைத் தேடாமல், அமைதியாக கூட்டத்தை கடந்து வந்து, பார்வதம்மாவின் உடலருகே அமர்ந்தது.

பின்னர், தனது தலையை அவரது தலையுடன் சாய்த்து, கண்களை மூடி அமைதியாக இருந்தது. அந்த காட்சி, அந்த குரங்குக்கும் மூதாட்டிக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரின் மனதையும் உருக்கியுள்ளது. “விலங்குகள் ஒருபோதும் அன்பை மறக்காது” என ஒருவர் கருத்து தெரிவித்ததுடன், “அந்த குரங்கு தழுவிய விதமே, அன்பு எல்லைகளையும், இனங்களையும் தாண்டுகிறது என்பதை காட்டுகிறது” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், “அன்பு விதைக்கப்பட்டால் அது மரணத்திற்குப் பின்னரும் மலர்கிறது. இயற்கையின் அன்புடன் ஒரு அழகான ஆன்மா பிரிகிறது” என உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம், மனிதர்கள் காட்டும் அன்பும் பரிவும், விலங்குகளின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது

No comments: