News Just In

2/10/2025 06:25:00 PM

பாலச்சந்திரனின் மரணத்தை நினைத்து வருந்தும் மஹிந்த; காலமும் கர்மாவும் தண்டனை கொடுத்துவிட்டது! சிறிதரன் எம்.பி. பகிரங்கம்

பாலச்சந்திரனின் மரணத்தை நினைத்து வருந்தும் மஹிந்த; காலமும் கர்மாவும் தண்டனை கொடுத்துவிட்டது! சிறிதரன் எம்.பி. பகிரங்கம்




விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசேட ஒதுக்கீட்டில் நான்கு மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான நுழை வளைவு நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த நுழைவு வளைவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பின் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது. உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டியது.

அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ, அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.

இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப்பேரவலங்களை நடாத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.

ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்த போது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார்.

அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும் வரலாற்றை பிழைவிட்ட தலைவராக வாழ்கின்றார். அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம். என்றார்.

No comments: