News Just In

1/07/2025 04:08:00 PM

கிரான் பிரதேச செயலக பிரிவு மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு அதிகாரிகள் கள விஜயம்!

கிரான் பிரதேச செயலக பிரிவு மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு அதிகாரிகள் கள விஜயம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக அதிகாரிகள் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவின் பணிப்பின் பேரில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜி பிரணவன் தலைமையிலான குழுவினர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சென்று அங்கு கிரான் பிரதேச உதவிச் செயலாளர் லோஜினி விவேகானந்தராஜ் பங்குபற்றுதலுடன், கூளாக்காடு, முருக்கன்தீவு, பிரம்படித்தீவு ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றியும் தீர்க்கப்படாத குறைபாடுகள் பற்றியும் அவற்றை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும் ஆராய்ந்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள போக்குவரத்து வசதிகள், காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள் ஆற்றைக் கடப்பதற்கான வழிமுறைகள், படகு மூலம் போக்குவரத்தை மேற்கொள்வதால் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

தரம் ஒன்பதுக்கு பின்னரான கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள், வெள்ளநீர் கிராமங்களுக்குள் உட்புகுவதன் பின்னரான சுகாதார பாதுகாப்பு தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது.

இவற்றைத்தொடர்ந்து முருக்கன் தீவு கிராம பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கிராமிய மட்ட சிறுவர் கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு அவர்களுடைய நடைமுறை செயற்பாடுகளில் எதிர்நோக்கப்படுகின்ற குறைபாடுகள் பற்றியும் கேட்டறியப்பட்டது.

No comments: