News Just In

9/16/2024 02:17:00 PM

அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்!.ஆளுநர் நஸீர் அஹமட்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நாட்டுக்கு உகந்த அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் மிகத் தெளிவாக இருப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நாட்டுக்கு நல்லது செய்யவும் எதிர்கால இளம் சமுதாயத்தினரை பொருளாதார நெருக்கடியின்றி, மோதலின்றி, இனவாதமின்றி, மதவாதமின்றி வழி நடத்தவும் பொருத்தமான அனுபவ ஆளுமை ஆற்றலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவே எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரித்து ஏறாவூரில் திங்களன்று 16.09.2024 இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் உரையாற்றினார்.

பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் ஆதரவாளர்களாகத் திரண்டிருந்த கூட்டங்களில்; கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், வரப்போகின்ற ஜனாதிபதி யார் என்பதில் நாட்டுக் குடி மக்களில் பாதிப்பங்கினருக்கு மேலுள்ள பெண்கள் தீர்மானித்து விட்டார்கள் ஏனெனில் எரிவாயு இல்லாமல் பட்ட கஷ்டம் பெண்களுக்குத்தான் தெரியும்.

நாட்கணக்கில் மாதக்கணக்கில் கேஸ் இல்லாமல் போனதால் அடுப்பெரியாமல் போனது, காசு பணமில்லாததால் பொருள் வாங்க வழியில்லை, இதனால் பட்டினி ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் நாடே இருளில் மூழ்கியது. நாடு எதிர் கொண்ட பொருளாதார வங்குறோத்து நிலைமை, கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கம், இனவாத வன்முறைகள் ஆகியவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை நிருவகிக்கும் பெண்களே.

அதனால், இன்னுமொருமுறை தகுதியற்றவர்களின் கையில் நாட்டைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க பெண்கள் விரும்பவில்லை என்பது நாங்கள் செல்லுமிடமெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது.

வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலிலே மற்றவர்களெல்லாம் ஜனாதிபதி வேட்பாளர்களாக இருக்கின்றபோது ரணில் விக்கிரமசிங்ஹ மட்டுமே தற்போதும் ஜனாதிபதி என்ற அனுபவ அந்தஸ்தில் இருந்து ஜனாதிபதியாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். இப்போது அவர் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி, எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின் அவர் பத்தாவது ஜனாதிபதியாக இருப்பார்.

அரசியலில் அடியிலிருந்து நுனிவரை படிப்படியாக பதவி உயர்வு கண்ட பண்பான தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே.

ரணில் விக்கிரமசிங்ஹ அவரது வாழ்நாள் அரசியலில் இனங்களை சிறுமைப்படுத்தி ஒரு வார்த்தைகூட பேசிய சரித்திரமில்லை, மதவாதம், இனவாதம், மொழி பேதம் காட்டாது அனைவரையும் சமமாக மதித்து சகவாழ்வை விரும்பும் ஒரு பெருந்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே.

நாம் இப்போது பயத்தின் காரணமாக குர்ஆன்களை குப்பையில் போடுவதில்லை, நாம் இப்போது இருட்டில் இருக்கத் தேவையில்லை. நாம் இப்போது எரிபொருள் நிலையங்களில் எந்த வரிசையிலும் நிற்பதில்லை, நாம் இப்பொழுது மத்தரசாக்களை மூடுவதில்லை இவற்றுக்கெல்லாம் காரணம் ரணில் விக்கிரமசிங்ஹவே என்றும் அவர் வலியுறுத்தினார்.

கேஸ் சிலிண்டருக்காக இனிமேல் ஆண்களும் பெண்களும் நடுத்தெருவில் நிற்க ணே;டுமா? பால்மா இல்லாமல் குழந்தைகள் அழவேண்டுமா? பலாத்காரமாக ஜனாஸாக்களை எரிக்க இடமளிக்க வேண்டுமா ? வீட்டில் புனித குர் ஆன்களை வைத்திருக்கும் பயத்தின் காரணமாக அவற்றை ஆற்றிலோ கிணற்றிலோ குளத்திலோ குப்பைத் தொட்டியிலோ போட அனுமதிக்க வேண்டுமா ? அவர்கள் பள்ளிவாசல்களை மூட இடமளிக்க வேண்டுமா ? பாடசாலைகளில் இஸ்லாமியப் பாடப்புத்தகங்கள் இல்லாமல் நமது முஸ்லிம் பிள்ளைகள் நாத்திகர்களாக வளர வேண்டுமா? சோசித்துப் பாருங்கள் ? என்றும் வடமேல் மாகாண ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

No comments: