மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) ஆகியோருக்கிடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் ஊடக வலையப்பின் தலைவரும், முன்னணி வர்த்தகருமான ரெய்னோர் சில்வாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜபக்ச தரப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தச் சந்திப்பை ரெய்னோர் சில்வா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் பிரேமதாச வெற்றிக்காக பணம், ஊடக பலம் ஆகியவற்றை பிரயோகிக்கத் தயார் என்றும், சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், தனது சகோதரன் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ரெய்னோர் சில்வா சஜித் தரப்புடன் பேரம் பேசியுள்ளார்.
சகோதரன் துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான பேரத்தை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், ரெய்னோர் சில்வா முன்வைத்த போதிலும், நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என்றும், அந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாக கையாளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ரெய்னோர் சில்வாவிற்கு கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, புதிதாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியின் மூலம் இதனை சாதித்துக் கொள்ள ரெய்னோர் சில்வா திட்டம் தீட்டியுள்ளார்.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்ததும் இந்த நிபந்தனையின் அடிப்படையில் என்பதுடன், கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டது மட்டுமன்றி, அவருக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாடி, துமிந்த சில்வா சிறையில் அடைக்கப்பட்டார். என்ன விலை கொடுத்தாவது சகோதரனை மீட்டுவிட வேண்டும் என்பதற்காக ரெய்னோர் சில்வா தற்போது பணம் மற்றும் ஊடக பலத்தைப் பயன்படுத்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்குக் கொண்டுவர முழு மூச்சில் செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு நகர்வாகவே ராஜபக்ச தரப்பின் ஆதரவை சஜித் பிரேமதாசவிற்கு பெற்றுக்கொடுப்பதற்கான நகர்வுகளை ரெய்னோர் சில்வா முன்னெடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பினர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் பட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வரவும், 2030ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் உதவிகளை செய்யவும் ரெய்னோர் சில்வா இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கக் கூடாது என்பதற்காகவே அண்மைக்காலமாக நாமல் ராஜபக்ச பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருந்தார்.
ரேனோ சில்வாவின் தொலைக்காட்சி, வானொலி, இணையச் செய்திகளில் சஜித் பிரேமதாசவிற்கு அமோக ஆதரவை வழங்கி வரும் ரெய்னோர் சில்வா, ஏனையோரை கடுமையாக தாக்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என தென் இலங்கை செய்திகள் தெரிக்கின்றன.
No comments: