News Just In

5/26/2024 11:56:00 AM

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுவெளியில் கலந்துரையாட முடிவு : சுமந்திரனுடனான சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு இணக்கம்!



ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில்பகிரங்கமாககலந்துரையாடுவதற்குமுடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை.

அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர்.

அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: