News Just In

5/12/2024 08:04:00 PM

உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கு நல்லாளுகைப் பயிற்சி!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்ற சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு செயலமர்வு இடம்பெற்றது.

ஆசிய மன்றத்தின் நிதி அனுசரைணயில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அமுலாக்கத்ததோடு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

திருகோணமலை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நல்லாளுகை வள நிலையத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த செயலாளர்கள் உட்பட 48 அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்.

நல்லாளுகையினூடாக உள்ளுராட்சி மன்றங்களில் பால்நிலை சமத்துவத்தை அமுலாக்குதல், பெண்கள் உரிமைகளையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல், பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களை அலுவலகங்களிலும் உள்ளுராட்சி மன்றங்கள் அமுல்படுத்தும் திட்டங்களிலும் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயதானங்களில் மனித உரிமைகள் சட்டங்களை அடியயொற்றியதாக செயலமர்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி எம்.ரீ.எம். இர்ஷாத், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார் அதன் அலுவலர்களான பி. சற்சிவானந்தம், வி. மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

No comments: