News Just In

4/14/2024 03:47:00 PM

சென்னை குன்றத்தூர் அருகே 1,400 கிலோ எடை கொண்ட ரூ.1,000 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்!








காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1,400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1000 கோடி. இதில் 400 கிலோவுக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க நிலைக் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் குன்றத்தூர் மேம்பாலம் அருகே பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்திக் கொண் டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அந்தச் சோதனையின்போது அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் சில பொருட்கள் லாரிகளில் வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் லாரிகளில் வந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் பெரிய லாரியில் 1,000 கிலோ தங்க கட்டிகளும் சிறிய லாரியில் 400 கிலோ தங்க கட்டிகளும் என மொத்தம் 1,400 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரிகளில் வந்தவர்களிடம் தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்களை கேட்டு வாங்கி சரிபார்த்தனர். இதில் 400 கிலோவுக்கு மட்டுமே ரசீது இருந்தது தெரியவந்தது. மீதமுள்ள 1,000 கிலோவுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தங்க கட்டிகள் ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் மூலம் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. பின்னர் இந்த தங்க கட்டிகள் அங்கிருந்து பல்வேறு நபர்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த தங்கத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1,000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து 400 கிலோவுக்கான தங்கத்துக்கு மட்டும் ரசீது வைத்துக் கொண்டு அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி இந்த தங்க கட்டிகள் வெளியே கொண்டு வரப்பட்டன என்பது தெரியவில்லை.

No comments: