
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் அங்கத்தவர்கள் வலியுறுத்துவதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
மாவட்ட சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கான திட்ட முன் மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் செயலமர்வும் மாதாந்த ஒன்றுகூடலும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை 12.09.2023 இடம்பெற்றது.
கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்ற இந்த செயலமர்வில், மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், ஹிந்து, இஸ்லாமி, கிறிஸ்தவ, பௌத்த சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் சமாதான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்;வில் சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்கள் பற்றிய கரிசனைகள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக, இந்த அமர்வில் கலந்து கொள்ளும்போது சகவாழ்வுக்கான கூருணர்வு முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட சர்வமதப் பேரவையின் சமாதான செயற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்கள்.
அவ்வப்போது சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகள் காரணமாக பிரதேச மக்களுக்கு ஏற்படுகின்ற உண்மையான தாக்கம், பிரதேசத்தில் இனங்கள், மதங்களுக்கிடையில் ஒற்றுமை சகோதரத்துவம் சகவாழ்வு வீழ்ச்சியடையக்கூடிய சூழ்நிலை, மோதலுக்குக் காரணமாக இருக்கக் கூடிய தரப்பினர், பிரச்சினைகளைத் தீவிரப்படுத்த எண்ணும் பேர்வழிகள், சமாதான சகவாழ்வுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஆர்வலர்கள் உள்ளிட்ட விடயங்கள் அறிக்கை மூலம் கேட்கப்பட்டிருந்தன.
சமாதானத்தைச் சீர் குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் முன்கூட்டியே அறிந்து அவை வன்முறை நிலைமாற்றத்திற்கான பன்முக நடவடிக்கைகள் செயல் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டும் என முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இணைப்பாளர் மனோகரன் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை மோதல் நிலைமாற்றத்திற்காக சகவாழ்வை ஏற்படுத்தும் சக்திமிக்க தரப்பாக இளைஞர் சமூகத்தை தயார்படுத்த வேண்டும் அதற்கான செயல்திட்டம் முனைப்பாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments: