News Just In

7/20/2023 02:05:00 PM

சட்டவிரோதமான முறையில் பதவி பறிக்கப்பட்டு அயல் மாவட்டத்திற்கு இடமாற்றம்!

முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அநீதியான முறையில் தனது பதிவி பறிக்கப்பட்டு அயல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்து தொடர்பாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட முன்னாள் கல்வி அதிகாரி எம்.எம். கலாவுதீன் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.

இது தொடர்பாக முறைப்பாட்டாளரான கலாவுதீன் தனது முறைப்பாட்டுப் பிரதியில் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த நான் காத்தான்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தில் கோட்டக்கல்வி அதிகாரி பதவிக்கு வெற்றிடம் காணப்பட்டமையால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு 20.01.2020ம் திகதி விண்ணப்பம் கோரி அது தொடர்பான நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டது.

அதனடிப்படையில் நான் தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் முறையான நியமனக் கடிதத்துடன் 03.03.2020ம் திகதி முதல் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரியாக கடமை ஏற்று கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி கடமையை மிகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் செய்து வந்தேன்.

இவ்வாறு கடமையாற்றி வருகையில் கடந்த 26.06.2023ம் திகதி இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் வரிப்பத்தாஞ்சேனை அல் அமீன் மகா வித்யாலயத்திற்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளேன்.

நான் வகித்த கோட்டக்கல்வி அதிகாரி பதவிக்கு வரலாற்றுப்பாட உதவிக்கல்வி பணிப்பாளர் ஒருவர் அவரது கடமைக்கு மேலதிகமாக கடமையாற்றும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் விசேட ஆளணியைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் பொது ஆளணிப் பதவியான கோட்டக்கல்வி அதிகாரிப் பதவிக்கு நியமனம் செய்ய முடியாது.

எனது பதவி பறிப்பு தொடர்பாக இம்முறைபாட்டின் முதலாம் பிரதிவாதியான கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு இதனை இரத்து செய்யுமாறு கோரியபோது ஆளுநரின் தீர்மானத்தில் நான் தலையிட முடியாது என கூறுகின்றார். ஆளுநரோடு தொடர்பு கொண்டபோது இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார்.

நான் கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருக்கையில் அதனை கவனத்தில் கொள்ளாது இம்முறைப்பாட்டின் இரண்டாவது பிரதிவாதியான மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் தான்தோன்றித்தனமாக இலங்கை நிர்வாக சேவை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணான வகையிலும் மற்றும் எனது அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் செயற்பட்டு பாரிய நிருவாகத் தவறொன்றை இழைத்துள்ளார்.

தற்போது எனக்கு 58 வயதாகிறது. அரசாங்க சேவை ஆணைக் குழுவின் சட்ட ஏற்பாடுகள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்; அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு என்பவற்றின் அடிப்படையில் 53 வயதை கடந்த ஒருவரை மாவட்டத்திற்கு வெளியில் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ இடமாற்றம் செய்ய முடியாது.

அத்துடன் 57 வயதை கடந்த ஒருவரை அவர் விரும்பினாலும் வலயத்தை விட்டு இடமாற்றம் செய்ய முடியாது என்பது சட்ட ரீதியான ஏற்பாடாகும்.

ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாது என்னை இடமாற்றம் செய்ததன் மூலம் எனது அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளது.

எனவே என்னிடமிருந்து பறிக்கப்பட்ட கோட்டக்கல்வி அதிகாரிப் பதவியினை எனக்கு மீண்டும் வழங்குமாறும், பொருத்தம் எனக் காணும் நிவாரணங்களை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத் தருமாறும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன்.

No comments: