
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடல்வழி ஆட்கடத்தல்; என்பது நாம் வாழும் இந்த உலகமயமாக்கப்பட்ட உலகில் மனித குலத்தின் மீது அதிகரித்து வருகின்ற மாபெரிய அச்சுறுத்தலாகும் என கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவகத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன் தெரிவித்தார்.
கடல்வழி ஆட்கடத்தல்; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வூட்டல் நிகழ்வு எஸ்கோ நிறுவனத்தின் பயிற்சி நிலையத்தில் சிரேஷ்ட வெளிக்கள இணைப்பாளர் ஜெயசாந்தி ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் நன்கு திட்டமிடப்பட்ட கடல்வழி ஆட்கடத்தல் பற்றி மேலும் தெளிவுபடுத்திய திட்ட இணைப்பாளர் உதயேந்திரன், எவ்வாறாயினும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பலவீனமான நிர்வாகச் சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சிறுபான்மை மக்கள் சார்ந்த கரிசனைகள் இன்மை, பொருளாதாரக் கொள்கையில் தெளிவான வழிகாட்டுதல் இன்மை, அபிவிருத்தியில் பெண்களுக்கு வாய்ப்பின்மை, இளைஞர் அமைதியின்மை, எதை இழந்தாவது சிறந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவா ஊழல் மிகுந்த முறைமைகள் என்பன காணப்படுகின்றன.
அதன் விளைவுகள் மோசமான தாங்கிக் கொள்ள முடியாத இழப்புக்களாக இருக்கும் அதேவேளை இவற்றில் ஈடுபடுவது பாரதுரமான குற்றமுமாகும்” என்றார்.
இது விடயமாக நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட கடல் வழி ஆட்கடத்தல் குற்றச் செயல்களுக்கெதிராகப் பணியாற்றும் குளோபல் இனிசியேற்றிவ் நிறுவனம், சமூக அபிவிருத்திச் சேவைகள் நிறுவனம், மற்றும் எஸ்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள கையேட்டில் இந்தக் குற்றச் செயல்கள் பற்றி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடல்வழி ஆட்கடத்தல் என்பது செழித்து வரும் உலளாவிய சட்டவிரோத வணிகத்தின் மற்றொரு வடிவமாகும். சிறந்த வாழ்விடத்தை நாடிச் செல்வதற்கும் அதைவிட முக்கியமாக மூன்று தசாப்த கால இன மோதலின் அட்மூழியங்களைத் தவிர்ப்பதற்காகவும் இந்த மிகவும் ஆபத்தான வழிகளைப் பலர் பயன்படுத்துவதால் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மீதும் பல வருடங்களாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
கடல்வழி ஆட்கடத்தல் பாதையைத் தேர்வு செய்யும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா ஒரு ஈர்ப்புடைய நாடாக இருந்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: