News Just In

12/25/2022 06:54:00 PM

போதையால் பாதை மாறும் "சிலோன்"



"
நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிக படித்த மக்கள் வாழும் ஊராக அடையாளப்படுத்தப்பட்ட ஊறொன்றின் முக்கிய பாடசாலைக்கு அண்மையில் மாணவர்களுக்கு பாதணி வழங்கும் விடயமாக சமூக்கமளித்திருந்தேன். அப்போது அந்த பாடசலையின் பிரதியதிபர் சற்றுமுன்னர் நடந்ததாக கூறிய விடயமொன்று என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது அதுதான் மாணவர்கள் மத்தியில் தலைதூக்கியிருக்கும் போதைப்பொருள் பாவனை. அந்த போதைப்பொருள் பாவனையினால் இன்றைய இளம் சமூகம் பாரிய ஆபத்தை சந்தித்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

கொரோனா தொற்றின் பரவல் முடிவில் அல்லது குறைந்த பின்னர் இலங்கை மூன்று முக்கிய பிரச்சினைகளை சந்தித்துள்ளது. அதில் முதன்மையானது தான் போதைப்பொருள் பரவல் அடுத்தே பொருளாதார நெருக்கடியையும், அரசியல் தளம்பலையும் குறிப்பிட முடியும். இந்த போதைப்பொருள் பாவனையானது ஒரு காலத்தில் சுமை தூக்கும் தொழிலாளிகளிடம் மட்டும் இருந்தது அது படிப்படியாக முன்னேறி மலையகத்தை ஆக்கிரமித்தது. இன்று முழுத்தீவையும் போதைப்பொருள் ஆக்கிரமித்துள்ளது. நாடுகெட்டிருக்கும் கெடுவை போதாதென்று கஞ்சாவுக்கும் பாராளுமன்றத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரச தரப்பே கஞ்சாவுக்கான வியாபார தூதுவர்கள் போல மாறியிருப்பது இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக நோக்கவேண்டியிருக்கிறது. பாலர் பாடசலை குழந்தைகள் முதல் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆபத்தை நன்றாக அறிந்த வைத்தியர்கள், படித்தறிந்த கல்விமான்கள், பாமர மக்கள் என பலரும் இந்த போதைப்பொருளை பாவிப்பதை நோக்கும் போது யாரை யார் திருத்துவது என்று விளங்க முடியாதுள்ளது.

இன்றைய பொழுதுகளில் பல்லினம் வாழும் எமது நாட்டில் எந்த இனத்தையும் போதைப்பொருள் அரக்கன் விட்டுவைக்கவில்லை. இஸ்லாத்தில் நேரடியாக போதைப்பொருள் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் முஸ்லிங்கள் அதிகம் வாழும் ஊர்கள் முதல் முஸ்லிங்கள் குறைவாக வாழும் ஊர்கள் வரை போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்பவர்களின் இல்லத்தில் இடம்பெறும் திருமண, ஜனாஸா கடமைகளுக்கு பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என பிரகடனம் நிறைவேற்றும் நிலைக்கு இன்றைய பொழுதுகள் மாற்றம் பெற்றுள்ளது.

நாட்டின் எல்லா பிரதேசத்திலும் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொறுப்பாளர் சபையினர் பல இடங்களிலும் தமது பிரகடன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஏனைய இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு சமாந்தரமாக முஸ்லிம் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனையும் விற்பனையும் அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாகக் காணப்படுவதை எல்லோரும் அறிவர். இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும், அதன் நாடு தழுவிய கிளைகளுக்கு இது சம்பந்தமான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பள்ளிவாசல்களுக்கும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளதாக ஊர்ஜிதப்படுத்த முடிகிறது. இது விடயமாக பள்ளிவாசல் நிர்வாகங்களினால் பல துண்டுப் பிரசுரங்களை அவ்வப்போது வெளியீடு செய்துள்ளது. மட்டுமல்லாது, அனைத்துப் பள்ளிவாசல்களிலும் அடிக்கடி இது விடயமாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல்களையும் செய்து வந்துள்ளனர். இன்னும் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் இது விடயமாக விசேடமான குத்பா பிரசங்கங்களும் நடத்தப்பட்டன. இருப்பினும், அதன் பெறுபேறுகள் எதுவுமே சாதகமாகவோ அல்லது குறைவடைவதாகவோ தெரியவில்லை. அனைத்தும் பூஜ்ஜியமே!

இதன் காரணமாக பள்ளிவாசல்கள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு பள்ளிவாசல்களினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது, முஸ்லிம் ஜமாஅத்தினர்களின் மையத்துக்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடிகளில் இவர்களது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட மாட்டாது. போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்கள் வீதிகள் தோறும் மற்றும் பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்படும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களின் விபரங்களை உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, மிக உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், போதைப் பொருளின் பாவனையாளர் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமை ரத்து செய்யப்படும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் வெளியூரைச் சேர்ந்தவர் எனில், உடனடியாக அவர் ஊரை விட்டும் வெளியேற்றப்படுவார். எனவே, மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டு மிகவும் பொறுப்புடன் நடந்து, எமது ஊருக்கும் இளம் சந்ததியினருக்கும் பேருதவி செய்யுமாறு அனைவரையும் மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எழுத்தில் இருக்கும் இந்த அறிவித்தல்கள் நடைமுறை சாத்தியப்பட வில்லை. சாத்திப்படுத்த போதைப்பொருள் விற்பனை முதலைகள் எவ்வளவு தூரம் வாய்ப்பளிக்கும் என்பது சந்தேகமே.

நாட்டில் ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் பாவனையால் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட யுவதிகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற பிரகடனங்கள் இன, மதம் பாராது ஒவ்வொரு மத ஸ்தலங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் நிச்சயம் இளைய சமுதாயத்தைக் காப்பாற்றலாம் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக அமைந்து தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகளை பல மத ஸ்தலங்கள் மேற்கொண்டாலும் மேலும் துரித கதியில் விழிப்புணர்வை உருவாக்கவேண்டிய பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளதையே நாம் காணலாம். இவைகளெல்லாம் இப்படி இருக்கத்தக்கதாக பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அண்மையில் கல்முனையில் டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பரீதியில் பெண்கள், சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இடம்பெற்றது. இந்த செயலமர்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா, சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர், பிரதேச செயலகங்களின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா, பி. ஜெனித்தா, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப், எஸ்.நிஸாந்தினி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனையினால் இலங்கையில் பாதிக்கப்படும் பெண்கள், சிறுவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர். இவர்களின் கருத்துக்களையும் உற்றுநோக்கும் போது இலங்கையின் எதிர்கால சந்ததி உச்சகட்ட ஆபத்தில் இருப்பது தெளிவாகிறது.

பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்கிய நாணயக்கார அண்மையில் பகிரங்க வேண்டுகோளொன்றை விடுத்திருந்தார். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி மதபோதகர்களும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் தொடர்புகொள்ளும் நபர்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது பெரியோரின் கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

முன்னர் இருந்த அளவை விட இப்போது புகையிலை பாவனைகளும் நாட்டில் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. போதைப்பொருள் பாவனையை ஊக்குவித்து நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்க முனைவோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் போது, விழித்திருக்க முடியுமென்ற தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவிக்கப்பட்ட விடயங்களை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் எவ்வாறாயினும், இந்த போதைப்பொருள் பாவனையால் உறக்கம் சார்ந்த பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகமயப்படுத்தல் மற்றும் தொழில்ரீதியான ஆற்றல்களை மேம்படுத்துதல் என்பவை இப்போது அவசியமாகிறது. ஹெரொயின், கஞ்சா, கேரள கஞ்சா, மதுபானம் மற்றும் போதை குழுசைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் காரணமாக வாழ்க்கையை இருளாக்கிக்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மனநிலை சிகிச்சை, உளவளத்துணை ஆலோசனை மற்றும் மருத்துவவியல் அணுகுமுறை என்பவற்றின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்படுகிறது. அக்காலப் பகுதியில் பயிலுநர்களின் ஆன்மீக அபிவிருத்திக்கு யோக தியானம் மற்றும் மத நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை நடத்தப்படுகின்றன. பயிலுநர்கள் புனர்வாழ்வு பெறுகின்ற காலத்தில் வதிவிட வசதிகள், உணவு, மருத்துவ வசதிகள் என்பவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிலுநர்களின் சீவனோபாய மார்க்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகத் தேவைப்படுகின்ற தொழில்ரீதியா தமிழன் பத்திரிகைன ஆற்றலை அபிவிருத்திசெய்யும் பயிற்சியும் தங்கியிருக்கும் காலத்தில் வழங்கப்படுகின்றது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இப்படியான இடங்களுக்கு அனுப்புவதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று பலரும் கூறினாலும் அது எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நான்கு பக்கமும் கடனால் மட்டுமல்ல கடலாலும் சூழப்பட்டுள்ள இலங்கை தீவில் விழிப்பான கடற்படை இருக்கிறது, வான்படை இருக்கிறது, தரைப்படை இருக்கிறது, செயற்திறன் கொண்ட பொலிஸார், இராணுவத்தினர் இருக்கிறார்கள் ஆனாலும் இந்த போதைப்பொருட்கள் எப்படி இவ்வளவு பாரியளவில் இலங்கைக்குள் ஊடுருவியது. அல்லது இலங்கையில் தான் தயாரிக்கப்படுகின்றதா? அப்படியாயின் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதுள்ளதா? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இலங்கை அரசியலமைப்பில் உள்ள குறைபாடுகளும், அதிகார வர்க்கத்தின் ஆணவமும், நாட்டை நேசிக்காத அரசியல்வாதிகளும், கடமை செய்ய மறுக்கும் அல்லது கடமையை துஸ்பிரயோகம் செய்யும் அரச அதிகாரிகளும் தான் காரணம் என்பது வெளிப்படை.

மனித குலத்திற்கு ஆபத்தாக எழுந்துள்ள பாரிய பிரச்சினை போதைப்பொருள் ஆகும். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையானது மனித சமூகத்தை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஒரு உலகளாவிய பிரச்சினையாக காணப்படுகிறது. இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் இதுவும் ஒன்றாகும். பொழுதுபோக்குக்காகவும் சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சுகத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இப்போதைப்பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.மேலும் சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றது எனும் கருத்து யாராலுமே மறுக்க முடியாதது.

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைவது அறிமுகமில்லாத நண்பர்களுடன் பழகுதல், வீட்டிற்கு வெளியே அதிக நேரங்களை செலவிடல் போன்றனவாகும். தற்கால இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்களாக தோழர்களின் ஊக்குவிப்பு, ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமை போன்றன உள்ளதாக கூறப்பட்டாலும் ஒழுங்கான வழிகாட்டிகள் இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை சீரழிகின்றது. சமூக அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர் தொடர்புகள் எல்லாவற்றிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோர் மாறும் நிலை ஏற்படுகிறது எனும் உண்மையை ஏற்க நாம் ஏன் மறுக்கின்றோம் ?

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் முதலில் தாங்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பான எந்த விடயத்திலும் ஈடுபட மாட்டோம் என திடசங்கற்பம் பூண வேண்டும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் அல்லது வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக வழக்குகளில் எந்த சட்டத்தரணிகளும் ஆஜராக கூடாது. பாடசாலைகளிலும், மத அமைப்புக்களிலும் போதைப்பொருள் பாவனை என்றால் என்ன? போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆபத்துக்கள் எவை? போன்ற ஆலோசனைகள் தெளிவாக சமூகங்களுக்கு எடுத்து கூறுதல் வேண்டும்.

பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வழிகாட்டல் கருத்தரங்குகள், ஆலோசனைகள் போன்றவற்றை மாணவர்கள் மத்தியில் வழங்கிய அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா போதைப்பொருள் பாவனையினை தடுக்க முடியும் என்பதை அறிந்து கொண்டது. ஆனால் இந்த நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டால் உயிராபத்துக்கள் கூட நிகழலாம் என்கின்ற நிலையே இலங்கையில் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.மாணவர்களுக்கு போதைப்பொருட்களினால் ஏற்படும் தீங்குகளை கூறி விழிப்புணர்வு செய்வதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கலாம். இதனை செய்ய கல்வியமைச்சு முழுமூச்சாக இறங்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

பெண்கள், சிறுவர் தொடர்பிலான உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப நிலைகள் தொடர்பில் கவனம் செலுத்திய முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி போன்ற அமைப்புக்கள் இப்போது போதைப்பொருள் பக்கம் தனது கவனத்தை ஈர்த்திருப்பது வரவேற்கக்கூடியது. ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகுபவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை கடிதம் அனுப்ப தீர்மானித்து நடவடிக்கையில் இறங்கியுள்ளமை ஒருவித திருப்தியை தந்தாலும் கூட போதை அரக்கர்களின் செல்வாக்கு மிஞ்சிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.

போதைப்பவனையின் பாதிப்புக்கள் தொடர்பில்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மேடை நாடகங்களை நடத்துதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்கை விபரித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்ற விளம்பரங்களை செய்துகொண்டே அவற்றை ஊக்குவிக்கும் பணியையும் அரசாங்கம் செய்கின்றது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கில்லை. போதைப்பொருளுக்கு எதிரான சட்டதிட்டங்களை கடுமையாக்குவது இன்றை சூழ்நிலையில் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு இலங்கையரும் தன்னையும் தானது நாட்டையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும். அரசாங்கமும், அரச இயந்திரங்களும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு படை வேலியை மேயாமல் கடமையை சரியாக செய்ய வேண்டும். சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும். போதை ஒழியும்

நன்றி தமிழன் பத்திரிகை

No comments: