News Just In

12/24/2022 06:22:00 PM

களுதாவளையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது ஆண்டு தொடர் விழாவும் புத்தகக் கண்காட்சியும்.




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்து 125 வது ஆண்டு தொடர் விழாவும் புத்தகக் கண்காட்சியும், மட்டக்களப்பு களுதாவளையில்; சனிக்கிழமை(24.12.2022) களுதாவளை கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் மாணவர்களின் கலை ஆற்றுகைகளுடன் நடைபெற்றது.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில், அவ்வாலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ், களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் கே.சத்தியமோகன், களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் ப.குணசேகரன், மற்றும் களுதாவளையில் அமைந்துள்ள ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ், அவர்கள் முதலில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தை தரிசனம் செய்து பின்னர் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆலய வாயிற் கோபுரத்தில் வைத்து சுவாமிகள் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவித்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கலாசார மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் தேவார இறைவணக்கத்துடன் ஆரம்பமாக இந்நிகழ்வில், வரவேற்பு நடனம், சுவாமி விவேகானந்தரைப் பற்றிய பேச்சுக்கள், வில்லுப்பாட்டு, மற்றும், சிக்காகோ போருரையின் காணொளிக் காட்சிகள், என்ப அரங்கேற்றப்பட்டன.

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம் செய்து 125 வது ஆண்டை முன்னிட்டு களுதாவனை இந்து மாமன்றத்தினால் ஏற்கனவே நடாத்தப்பட்ட போட்டிகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.

விவேகானந்தரின் சிறப்புக்கள் தொடர்பில் இதன்போது இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் அவர்களும், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் அவர்களும், உரையாற்றினர்.

இந்நிலையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் நிருவாகத்தினரால் புத்தகக் கண்காட்சி ஒன்றும் இதன்போது இடம்பெற்றதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் 15 வீத விலைக்கழிவில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments: