News Just In

11/29/2022 08:22:00 PM

புடினின் மற்றுமொரு போர் ஆயுதம்! உக்ரைன் நிலைகுலைவு - நேட்டோ வெளியிட்ட தகவல்!

ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் உக்ரைனின் குளிர்காலத்தை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்த முயற்சிப்பதாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்ரோல்டன்பேர்க் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது தாக்குதல்களை நடத்திய ரஷ்யா பல்லாயிரக்கணக்கான மக்களுக்குரிய மின்சாரம், நீர்விநியோகம் மற்றும் வதிவிடங்களுக்கான மத்திய வெப்பமூட்டும் பொறிமுறைகளை அழித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ருமேனிய தலைநகர் புக்காரெஸ்டில் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் ஒன்று கூடல் இடம்பெற முன்னர் அதன் பொதுச்செயலாளரின் ரஷ்யா மீதான குற்றச்சாட்டு வந்துள்ளது.

உக்ரைனில் கடுமையான குளிர் நிலவிவரும் நிலையில் ரஷ்யாவின் தாக்குதல்களால் மின்சார விநியோகம் மற்றும் வதிவிடங்களுக்கான மத்திய வெப்பமூட்டும் பொறிமுறைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க நேட்டோ பங்காளி நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவு மின்பிறப்பாக்கி இயந்திரங்களை வழங்கியுள்ள போதிலும் நிலைமை சவாலாகவே உள்ளது.

இதனையடுத்து விளாடிமிர் புடின் குளிர்காலத்தை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்த முயற்சிப்பதாக ஜென்ஸ் ஸ்ரோல்டன்பேர்க் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் உக்ரைனுக்கு மேலதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கும் உறுதியை நேட்டோ வெளியுறவு அமைச்சர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள நேட்டோ பொதுச்செயலாளார் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: