News Just In

11/21/2022 12:53:00 PM

நாம் பீனிக்ஸ் பறவைகள் போல் மீண்டும் மீண்டும் வருவோம் – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சாணக்கியன்!



எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடைகளுக்கு மத்தியில் எம் உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எமது மண்ணுக்காகவும், இனத்திற்காகவும், இன விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் போராடி வீர மரணமடைந்த எமது வீரர்களை இந்த வேளையில் நினைவுப்படுத்திக் கொள்கிறேன்.

1978 ஆம் ஆண்டு எமது இளைஞர்களின் கைகளில் இருந்த பேனா பறிக்கப்பட்டு ஆயுதம் வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை ஊடாக அரசியல் உரிமைக்காக போராடி, பெரும்பான்மை சமூகத்தின் அரசாங்கங்களினால் ஏமாற்றப்பட்டதன் பின்னரே ஆயுதம் வழங்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு முதல் தந்தை செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்கள் ஆகியவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திய நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடைகளுக்கு மத்தியில் எம் உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம்.

தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை தமிழரசு கட்சி 75 வருட காலமாக போராடுகிறது. தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து போராடிய கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் ஒருமுறை 'தமிழ் சமூகம் பீனிக்ஸ் பறவை போல் அழிக்க அழிக்க மீண்டும் வருவோம்' என குறிப்பிட்டார்.

தந்தை செல்வா காலத்தில் ஆரம்பமான இந்த அரசியல் போராட்டம், பல தலைமைகளை கண்டுள்ளது. முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார்கள். தற்போது நானும் தமிழ் சமூகத்தின் உரிமைக்காக போராடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு பற்றி குறிப்பிடவில்லை.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத காரணத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் எவ்விடத்திலும் சுட்டிக்காட்டவில்லை.

எமக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டால் நானும் தொடர்ந்து போராடுவேன், தீர்வு வழங்கப்படாவிட்டால் 75 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அமிர்தலிங்கம், சம்பந்தன், மா.வை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் தோற்றம் பெறுவார்கள். எமது அரசியல் உரிமையை ஒருபோதும் மறுக்க முடியாது.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும்.

வெறுமனமே சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது. பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக காலம் காலமாக போராடுவோம்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது தமிழ் சமூகத்திற்கான அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்த தன்மையில் செயற்படுவோம்.

கோட்டா- மஹிந்த சகோதர்களுக்கு மத்தியில் ஒற்றுமையில்லாமல் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிபோனார். இவ்வாறு கருத்து முரண்பாடுகளுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். என்ற வாக்குறுதியை இந்த மாதத்தில் வழங்கிக் கொள்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: