யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது பேருந்து சாரதி மற்றும் பெண்ணொருவர் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தததுடன், குறித்த பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேருந்தின் சாரதி தனது பேருந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்து நொச்சியாகம பகுதியில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.
அவர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 32 வயது மதிக்கத்தக்கவர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றுமொருவர் 30-35 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் அவரது அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
No comments: