News Just In

9/16/2022 11:21:00 AM

மரணித்த பின்னும் வாழும் அஸ்ரப்




நூருல் ஹுதா உமர்

தலைவர் இந்நேரம் இருந்திருந்தால் நாட்டு மக்கள் இருக்கும் இந்த நிலையில் அதை செய்திருப்பார், இதை செய்திருப்பார், அது நடந்திருக்கும், இது நடந்திருக்கும் என்று ஒருவர் காலமாகி 22 ஆண்டுகள் கடந்தும் ஒருவர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றால் அதுதான் தலைமைத்துவ ஆளுமை என்பது. இந்த ஆளுமைக்கு சொந்தக்காரராக வாழ்ந்து மறைந்தவர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும், தேசிய ஐக்கிய முன்னணியின் ஆரம்பகர்த்தாவுமான முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப்.

இன்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பகல் வேலை சூரியன் உச்சியில் தன்னுடைய உயர் வெப்பத்தை கிழக்கில் பரப்பிக்கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அப்போதுதான் கிழக்கில் அஸ்ரப் எனும் மாதலைவனின் மரண செய்தி பரவலாக பரவிக்கொண்டிருந்தது. கிழவிகள் முதல் குமரிகள் வரை ஒப்பாரி வைத்து அழுத நாள் அது. ஆண்களும் மனது விம்மி வாய்விட்டு அழுதார்கள். தமது தலைவனை, சகோதரனை, நண்பனை, பிள்ளையை இழந்த சோகத்தை கிழக்கு மண்ணின் ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் அனுபவித்தார்கள். தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் எதிரிகளும் ஸ்தம்பித்து நின்ற செய்தியாகவே அவரின் மரணச்செய்தி அமைந்திருந்தது. அவர் மரணிக்க வில்லை காட்டுக்குள் மறைந்து இருக்கிறார் விரைவில் ஊருக்குள் வருவார் என்று நம்பிய அப்பாவி தாய்மார்களின் ஏக்கம் இன்னும் நிறைவேறவில்லை.

அப்படி சாதித்த அந்த மாமனிதன் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948ஆம் ஆண்டு சம்மாந்துறை ஹுசைன் விதானைக்கு மகனாக பிறந்து இலங்கை முஸ்லிங்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவராக வாழ்ந்து வரலாறு படைத்து சதியால் விதி முடிந்து இறையழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றுதான் கூற வேண்டும். அவரது மரணத்தின் முடிச்சுக்கள் இன்றுவரை அவிழ்க்க முடியாது தொடரும் மர்மமாகவே இருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் "இரும்பு மனிசி" செல்வி ஜெயலலிதாவின் மரணத்தை போன்று.

முஸ்லிங்களால் மட்டுமின்றி இலங்கையர்களினால் சிறந்த தலைவராக கொண்டாடப்படும் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் பச்சை வயல் நிறைந்த மலை முகடுகள் பரந்த மிகப்பெரிய கிராமமான சம்மாந்துறையில் முஹம்மது மீரா லெப்பை ஹுஸைன் மற்றும் மதீனா உம்மா அவர்களுக்கு மூத்த புதல்வனாக கல்முனையில் பிரபலமான காரியப்பர் குடும்பத்தில் பிறந்தார். கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் தனது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த அஸ்ரப், சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இலங்கை அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டார். அதனாலயே அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகத்தை தனது அரசியல் குருவாக அஷ்ரப் வகுத்துக் கொண்டார். அரசியலையும், சமூகத்தையும், சட்டக்கல்வியையும் காதலித்த அதே அளவுக்கு காதலித்த பேரியல் இஸ்மாயிலுடன் தனது இல்லற வாழ்வை 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். காதலின் அடையாளமான அமான் அஸ்ரப் எனும் ஒற்றை புதல்வருக்கு சிறந்த தந்தையாகவும் அவர் வாழ்ந்து மறைந்துள்ளார்.

இலங்கை முஸ்லிங்களின் மாபெரும் தலைவராக கொள்ளப்படும் மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப். அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலில் விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து பல அரசியல் துரோகிகளினதும், எதிரிகளினதும் சொல்லம்புகளையும் தாங்கிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர். பல்வேறு தேசிய கட்சிகளில் முஸ்லிங்கள் ஒடுக்கப்பட்டதை தகர்த்து முஸ்லிங்களுக்கு அரசியல் விடுதலை கிடைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் என்பதே காலத்தின் கணிதமாக அமைந்துள்ளது.

ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர் பிரதேச வாத, இனவாத திரைகளை கடந்து நாட்டுக்கு சேவை செய்த சிறந்த அரசியல்வாதி என்பதையும் தாண்டி பெரும்பான்மை சிங்கள, தமிழ் சமூகத்தினருடனும் அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிய தலைவர் அஸ்ரப், இன உறவுப் பாலமாகவும் இருந்தார். சில கசப்பான சம்பவங்களினால் அரசியலில் உந்தப்பட்ட அஸ்ரப் வரலாற்றில் பல தடயங்களை ஆழமாக பதித்துள்ளார்.

அவர் தலைவராக இருந்து, அமைச்சராக இருந்து நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் செய்த சேவைகள் இன்றும் மக்களினால் போற்றப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் வரும்போது கூட அதை லாபகரமாக கையாண்ட பக்குவம் அவருக்கு இருக்கிறது. தன்னுடைய அமைச்சுப் பதவிகளை விட சமூக அக்கறையை பற்றி அதிகமாக சிந்தித்த அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களுக்கு சவால்விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தும் இருக்கிறார். குறிப்பாக, பெரும்பான்மைக் கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்து அந்த குறையை நீக்கிய அவர் முஸ்லிம் தலைவராக மட்டுமின்றி நாட்டின் பொறுப்பான குடிமகனாகவும் பல இடங்களில் சாதித்துள்ளார்.

அவர் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தினார். ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுடன் முஸ்லிம் சமூகம் கைகோத்திருப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டார். அதனை அவர் பல சந்தர்பங்களில் சாதித்தும் காட்டியிருந்தார். நாட்டின் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருப்பார்களாயின் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்தகால அரசியல் போக்கை வைத்து நிகழ்கால அரசியலுக்கான திட்டங்களை வகுப்பதில் அவரைப் போன்ற சிறந்த முஸ்லிம் தலைவர் எவருமே இருக்கமுடியாது. அரசைப் பகைத்துக்கொண்டு தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என தலைவர் அஷ்ரப் கூறிய விடயம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு தற்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது.

1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஆரம்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பயணத்தை 2012 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு 2000ஆம் ஆண்டிலே திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வளர்ச்சி கண்டு அதனூடாக அரசில் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தேசிய ஐக்கிய முன்னணியை அஸ்ரப் ஆரம்பித்தார். தேசிய ஐக்கிய முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து 2012ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது எங்கெங்கு ஆசனங்களை வெல்வது என்பவை தொடர்பில் இரவு பகலாக தலைவர் அஷ்ரப் திட்டமிட்டார்.

எனினும், அவரது மறைவைத் தொடர்ந்து மர கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் கட்சி பிளவடைந்தது. அதாஉல்லா, றிசாத், ஆசாத் சாலி, ஹசன் அலி எனப்பலரும் பல க(கா)ட்சிகளை தொடங்கினார்கள். இதனால் தலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்பு இலக்கு என்பவற்றை முஸ்லிங்களினால் அடையமுடியவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. தலைவரின் கனவு சிந்தனைகள் பிரதிபலிக்கப்பட வேண்டுமாயின் முஸ்லிங்களுக்கிடையில் உள்ள பிளவுகளை மறந்து எல்லோரும் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும். அவ்வாறான நிலை ஏற்படும்போது மாத்திரமே மீண்டும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து தலைவரின் கனவை நனவாக்க முடியும்.

தலைவர் அஷ்ரபின் இலட்சியங்களில் ஒன்றான தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று பழைய மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உபவேந்தராகி மிகச் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உள்வாங்கி கல்விப் பணியாற்றி வருகின்றது. அது மட்டுமின்றி அவர் எம்மனங்களில் விதைத்த சிந்தனைகள் ஊட்டித்தந்த அரசியல் பாடங்களே இன்றும் எங்களை அரசியலில் ஈடுபடுத்தியுள்ளது என்று கூறும் யாரும் தேர்தல் போஸ்டர்களையும், பிரச்சார மேடைகளையும் தாண்டி அவரது கொள்கைகளை ஏற்பதில்லை அல்லது அமுல்படுத்துவதில்லை அதிலும் குறிப்பாக மு.கா.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை வரைவதில் அஷ்ரப் மிகத் தீவிரமாக உழைத்திருந்தார். பலவகையான அரசியல் வியூகங்களை அமைப்பதில் திறமையாக இருந்த அஸ்ரப், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதன் பெறுபேறாகத் தான் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் பெரும் பொறுப்பு அவருக்குக் கிட்டியது. சுமார் 3 மணித்தியாலங்களாக அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பலத்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் உரையாற்றிய உரை இலங்கை அரசியல் வரலாற்றில் நினைவு கூரப்படும் சிறப்புக்குரியதாகும். அரசியல் என்பது அஷ்ரப் அவர்களின் வாழ்வில் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதற்கு அப்பால் அஷ்ரப் பல்துறை சார்ந்த ஆளுமையே அவரை ஒரு மகா புருஷராக எம்முடன் நடமாட வைத்துள்ளது. அஷ்ரப் அவர்களின் பேச்சுத் திறனும் தர்க்கிக்கும் ஆற்றலும், விவாதத் திறனும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. என்கின்றனர் அரசியல் ஆராய்ச்சியாளர்கள்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தை அணுகி ஆராய்வோர் அவரிடம் தனித்திறமையான ஒரு ஆற்றல் பரிணமிப்பதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக நிற்கின்றார். அதனால் தான் அவரால் மரணத்தை நோக்கி சிந்திக்க முடிந்தது. மரணத்தோடும் அவரால் போராட முடிந்தது, அவரால் மரணத்தை நோக்கி அறைகூவல் விடுக்கவும், மானுடத்தை நோக்கி நேசக்கரம் நீட்டவும் முடிந்தது. நான் எனும் நீ கவிதைத் தொகுப்பை தந்த கவிஞர் அஸ்ரப் சிறந்த இலக்கிய ஆளுமையாகவும் தன்னை நிலை நிறுத்தினார். புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு உணர்ச்சி பொங்கும் வரிகளினால் உணர்வு நிரம்பிய ஒன்றாகவே இன்றும் உள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அஸ்ரபுக்கு பின்னரான தலைமைத்துவ நடவடிக்கைகளில் எழும் மிகப்பெரிய முரண்பாடுகளையும், அதிருப்திகளையும் தேர்தல் காலங்களில் மறக்கடிக்கச் செய்யும் ஆற்றல் தலைவர் அஷ்ரபின் கவிவரிகளில் உருவான புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு இறுவெட்டுக்களுக்கு உள்ளது என்றால் மிகையாகாது. தலைவர் அஷ்ரபின் கவி வரிகளில் உருவான புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு இறுவெட்டுக்களை தடை செய்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் மிகப்பெரிய சரிவை காணலாம். அந்தளவிற்கு கிழக்கு முஸ்லிங்களை பற்றி ஆராய்ந்து அறிந்து வைத்திருந்தார் மறைந்த முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப்.

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற, சமூகப்பிரச்சினைகள் வரும்போது சமூகத்துக்காக பேசக்கூடிய தைரியத்தையும் உணர்வையும் ஏற்படுத்திய தலைவர் அஷ்ரப் அவர்கள் 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி அரநாயக்கவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். இன்றும் முஸ்லிங்களின் மனதில் மட்டுமல்ல நிறைய தமிழர்களின், சிங்களவர்களின் பூஜை அறையிலும், வீட்டு முன் அறையிலும் அஷ்ரபின் படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. சிறுபான்மைக்கு உப ஜனாதிபதி கேட்டு பல மணித்தியாலங்கள் கூச்சல் குழப்பத்தின் மத்தியிலும் இறை உதவியுடன் வெல்வோம் என்று கோஷமெழுப்பிய அஷ்ரபின் இடம் இலங்கை முஸ்லிம் அரசியலில் வெற்றிடமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆராய புலனாய்வுகள் தொடங்கப்பட்டன. அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் சதி வேலைகள் பற்றி பலவிதமான கருத்துகள் அடிபட்டன. புலனாய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. புலனாய்வின் முடிவு எப்படி இருந்தாலும், தலைவர் அஷ்ரப்பின் மரணம் இதுவரை நிரப்பப்படாத வெற்றிடத்தை முஸ்லிம் அரசியலில் உருவாக்கிவிட்டது.


No comments: