News Just In

5/18/2022 06:57:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!

மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) திகதி புதன்கிழமை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் படுகொடுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூறும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பெருந்திரலானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததுடன் அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழினப் படுகொலை நினைவேந்தல் தின அறிக்கை மே 18!!

மே 18, 2022 ஆகிய இன்றைய நாளில், இலங்கையின் வடக்கு கிழக்கைச் சார்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆன நாங்கள் அனைவரும் போரினால் கொல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்வதற்காக இங்குக் கூடியிருக்கிறோம்.

இந்த நாட்டின் சிறுபான்மை இனமான வடக்கு கிழக்கு வாழ் தழிழர்களான எங்கள் மீது அரசினால் ஏவப்பட்ட குரூர யுத்தத்தை மூன்று தசாப்தங்களாக அனுபவித்தோம். 2009 ஆம் ஆண்டில், போரின் இறுதிக் கட்டத்தில் தொடர்ச்சியான செல் வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்களின் காரணமாக பச்சிளம் பாலகர்கள், கற்பினித் தாய்மார், முதியவர்கள் அடங்கலாக பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். சிவிலியன் இடங்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், தாக்குதல் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்ட வலயத்துக்குள் இருந்த மக்கள் மீது இலங்கை அரசு இரசாயன குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பிரயோகித்தது. ஆதாரங்களுக்கு அமைய, இறுதி யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்காணோர் படுகாயமடைந்தனர், உடல் உறுப்புக்களை இழந்தனர், உருச்சிதைவுக்கு உள்ளாகினர், பலர் இன்னும் உடல்களில் செல் துண்டுகளுடனும் சன்னங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

உணவும் மருத்துவ வழங்கலும் தடைபட்டதால், பசியும் பட்டினியும் வியாபித்திருந்தது. மக்களுக்கு உப்பில்லாக் கஞ்சிதான் வழங்கப்பட்டது. கஞ்சி வாங்க கஞ்சி வழங்கும் இடத்துக்கு சென்ற பிள்ளைகள் செல் தாக்குதலுக்கு உள்ளாகினர். உணவுப் பொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்கள், கற்பினிப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கொல்லப்பட்ட தமது உறவுகளின் உடலங்களை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது.

போரின் இறுதியில், ஆயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டனர். தமது பிள்ளைகளை திருப்பி அனுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் மக்கள் தமது பிள்ளைகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். எனினும் சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட பலர் இன்னும் திரும்பி வராததுடன் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதும் தெரியாது,தமிழ் சமூகம் இன்னும் கூட்டு உளவடுவால் துன்புற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சமூகம் கூட்டாக அனுபவித்த துன்பங்களும், இறுதி யுத்தத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தழிழர்கள் கொல்லப்பட்டதும் ஒரு இனப்படுகொலையாக இன்னும் சர்வதேச சமூகத்தாலோ பின்னர் வந்த இலங்கை அரசாங்கங்களாலோ ஏற்று அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே,
தழினப் படுகொலை நடைபெற்றதை ஏற்று அங்கீகரிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசையும் கோருகிறோம்.
மேலும், நாம் பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறோம்.

•வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு வழங்க வேண்டும்

•வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும்

•போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறல் வேண்டும்

•அனைத்து தழிழ் அரசியல் கைதிகளையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடன் விடுவிக்க வேண்டும்

•வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலை முடிவுறுத்தல்

•அனைத்து வகையான காணி அபகரிப்புகளையும் உடன் நிறுத்த வேண்டும்

•சிறுபான்மை மக்களின் மத, கலாச்சார தலங்களை ஆக்கிரமிப்பதை உடன் நிறுத்த வேண்டும்

•பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்

சமூகமட்ட அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள்.


அனுசரணை : வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இலங்கை
மே 18, 2022

No comments: