News Just In

10/20/2021 06:39:00 PM

குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் நாமலை சந்தித்தார் இந்திய பிரதமர்இந்தியாவின் உத்தர மாநிலத்தின் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் இன்று புதன்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டதோடு , நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 100 பௌத்த மதகுருமார் அடங்கிய குழுவினர் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்தனர்.

குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குஷிநகர் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

குஷிநகர் விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை குழுவினர் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தள் ஷ்ரிங்லாவினால் வரவேற்கப்பட்டனர். விமான நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.


குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் நாமலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

சங்கைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் நேற்று ஆரம்பம். அதற்கமைய கொழும்பிலிருந்து குஷிநகருக்கான விமானத்தின் வருகையுடன் வஸ்கடுவ புனித கபிலவஸ்து சின்னங்களின் கண்காட்சி இன்று பிற்பகல் ஆரம்பமானது.

இதன் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை உத்தர மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்.

புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த ஸ்தலமான குஷிநகர் மிகவும் தனித்துவமான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமையவேண்டும் என அறிவித்திருந்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணித்தது. இக்குழுவில் நான்கு இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கிய விகாரைகளைச்சேர்ந்த சுமார் 100 சிரேஸ்ட பௌத்த மதகுருமாரும் இந்த முதலாவது விமான சேவையில் இணைந்து கொண்டனர். இந்தியாவின் பௌத்த வளாகத்தின் மையப் புள்ளியாக குஷிநகர் கருதப்படுவதுடன் புதிய சர்வதேச விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை கணிசமான அளவில் மேலும் பலப்படுத்தும்.

இந்த அங்குரார்ப்பண விமானசேவை மக்களிடையிலான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல் இரு அயல் நாடுகளுக்கும் இடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நாகரிக உறவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த இருதரப்பு உறவில் கலாசார, ஆன்மீக மற்றும் மொழியியல் பிணைப்புகளுக்கு பௌத்த மதம் மையமாக உள்ளது.

இலங்கையிலிருந்து சென்ற குழு இந்தியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வாரணாசிக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. அத்தோடு இக்குழு இன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதோடு , நாளை வியாழக்கிழமை மாலை கொழும்புக்குத் திரும்புவதற்கு முன் கங்கை தரிசனத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபுதிமஹாவிகாரையிலிருந்து புனித கபிலவஸ்து புத்தர் சின்னங்களும் வப் போயா நாளில் நடைபெறும் இந்த முதலாவது விமான சேவையில் கொண்டு செல்லப்பட்டன.

புத்தபெருமானின் நினைவுச்சின்னங்களை தற்போது பாதுகாத்து வரும், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் இப்புனித சின்னங்களை குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையில் கொண்டுசென்றார்.

புனித சின்னங்களுக்கு குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் உரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதோடு , இந்திய அரசாங்கத்தால் முழுமையான அரச கௌரவமும் வழங்கப்பட்டது. மேலும் குஷிநகர் மற்றும் சாரநாத் உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் அவை காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குஷிநகருக்கான முதலாவது விமானசேவையும் புனித சின்னங்களின் கண்காட்சியும் இந்திய இலங்கை மக்களால் பகிரப்படும் பொதுவான அம்சங்களுக்கு சான்றுபகிர்வதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No comments: