News Just In

9/18/2020 10:12:00 PM

மட்டக்களப்பு- செங்கலடியில் கோர விபத்து குடும்பஸ்தர் பலி! ஒருவர் படுகாயம்!


 ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை செங்கலடி நகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (18.09.2020) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பக்கமிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துகொண்டிருந்த கார் ஒன்று அவலதுபக்க வீதியோரத்தால் நடந்து சென்றுகொண்டிருந்தவரையும் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரையும் மோதிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கொம்மாதுறை எம்.பி.கே வீதியை அண்டி வசிக்கும் சுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது 41) என்பவர் தலத்திலேயே பலியாளார்.

இவ்விபத்துப்பற்றி மேலும் தெரியவருவதாவது, வேகமாக பயணித்த கார் தீடீரென தடம்மாறி மறுபக்கத்திற்குச் சென்று வீதியிலும் வீதி மருங்கிலும் சென்றவர்களை மோதித் தள்ளியுள்ளது.

இந்த விபத்து அங்கிருந்த எரிபொருள் நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவீ கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தினால் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றும் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கே. நடராஜா எனும் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தினையடுத்து அப்பிரதேசத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் விபத்தை உண்டாக்கிய காரைக் கைப்பற்றியுள்ளதுடன் கார் செலுத்திய நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். ‪




















No comments: