
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நவகிரி பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலமும் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களினூடாகவும் சுமார் 17200 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதென ஆரம்ப பயிர்ச் செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிறுபோகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை உரிய காலத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபையூடாக அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு செய்து தரப்பட வேண்டும் என்றும் விவசாய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத்தை வினைத்திறனுடன் செயற்படுத்துவதுபற்றியும், அரசாங்க உதவித்திட்டத்தில் உரவகைகளைப் பெற்றுக் கொடுப்பதுபற்றியும் தரமான விதை நெல்லைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டதுடன் செய்கை பண்ணப்படாத நெல் வயல்களில் மறு பயிர்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தில் பழுகாமம் கமநல சேவைகள் பிரிவிலுள்ள 1974.8 ஹெக்டேயர் மற்றும் மண்டூர் கமநலச் சேவைப்பிரிவிலுள்ள 2494 ஹெக்டேயர் நெல் வயல்களுக்கும் 62.8 ஹெக்டேயர் மறுபயிர்களுக்கும் அரச உதவியில் உரம் விநியோகிக்க மாவட்டச் செயலாளர் கலாமதியின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும், அமைச்சின் சுற்றுநிருபம் எதிர்வரும் 15ஆம் திகதி வெளியானதும் அரச உதவியிலான உர விநியோகம் ஆரம்பமாகும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க உரிய காலத்தில் விவசாயிகள் தமது தேவைகளை முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் சிராஜூன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பீ. இக்பால், மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். பேரின்பநாயகம், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் முஹம்மத்; அஸார், விவசாயக் காப்புறுதி சபையின் பணிப்பாளர் கே. பாஸ்கரன், வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் சிராஜூன் உட்;பட விவசாயத் துறைசார்ந்த உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments: