
இலங்கை ஆசிரியர் சேவைக்கு கல்வியியல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,
உயர் நீதிமன்றம் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாக கொண்டுவரப்படவுள்ள புதிய சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் தொடர்பில் ஆசிரியர்–அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் உரிய அதிகாரிகளின் தலைமையில் 2026.10.02 அன்று இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த ஆட்சேர்ப்புகளுக்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதற்கமைய, அரச சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பில் கௌரவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, குறித்த சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் கலந்துகொண்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இச்சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் மேற்கொண்டதன் பின்பு, குறித்த கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள் உட்பட ஆறு சேவைகளின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துவதற்காக கல்வித் தொழில்சார் பேரவையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, ஆசிரியர்–அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments: