இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுணர்வு நிரலாக்கல் Vibe Coding பயிற்சிப் பட்டறை, 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வியாழக்கிழமை, தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன மென்பொருள் அபிவிருத்தி முறைகள் வேகமாக முன்னேறிவரும் நிலையில், மாணவர்களுக்கு புதிய தலைமுறை நிரலாக்க அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதே இப்பயிற்சிப் பட்டறையின் பிரதான நோக்கமாக அமைந்தது.
இப்பயிற்சிப் பட்டறையின் வளவாளராக தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் எம்.எஸ்.எஸ். ராஸித் அவர்கள் கலந்து கொண்டு, Vibe Coding என்ற புதிய கருத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மென்பொருள் மற்றும் இணையப் பயன்பாடுகளை உருவாக்கும் நடைமுறைகள், Prompt Engineering நுட்பங்கள் மற்றும் நவீன நிரலாக்கப் போக்குகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களையும் செய்முறைப் பயிற்சிகளையும் வழங்கினார்.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில், தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் கலாநிதி சி.எம்.எம். மன்சூர், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். பௌசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இவ்வாறான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினர்.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நிரலாக்கம் மேற்கொள்ளும் நவீன அணுகுமுறைகள் குறித்து பயனுள்ள அறிவையும் நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக் கொண்டனர்.
No comments: